×

தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலகளாவிய தீவிரவாதியாக ஐநா அறிவிப்பு

நியூயார்க்: தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலகளாவிய தீவிரவாதியாக ஐநா அறிவித்துள்ளது. அல்-கைதா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவாக நிதியளித்தல், திட்டமிடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது ஐநா பாதுகாப்புக் குழு தடை விதித்துள்ளது.

ஐநா பாதுகாப்புக் குழு நேற்று ஐ.எஸ்.ஐ.எல் மற்றும் அல்-கைதா பொருளாதாரத் தடைகள் பட்டியலில் மெஹ்சுத்தை சேர்த்தது. அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது. அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுவிடும். தற்போது அவரை உலகளாவிய தீவிரவாதியாகவும் ஐநா அறிவித்துள்ளது. அல்-கைதாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளுக்கு நிதியளித்தல், திட்டமிடல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதற்காக மெஹ்சுத் பட்டியலிடப்பட்டதாக ஐநா-வின் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

அல்-கைதாவுடனான தொடர்புக்காக தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் ஜூலை 29, 2011 அன்று தடை செய்யப்பட்டது. தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் முன்னாள் தலைவர் மெளலானா ஃபஸ்லுல்லாவின் மரணத்தைத் தொடர்ந்து, 2018 ஜூன் மாதம், மெஹ்சுத் அவ்வமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதலுக்கு அவ்வமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. 2010 மே 1 அன்று டைம்ஸ் சதுக்கத்தில் குண்டுவெடிப்பு முயற்சிக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது. 2010 ஏப்ரலில் பெஷாவரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு எதிராக பலதரப்பட்ட தாக்குதல்களை இவ்வமைப்பு தான் நடத்தியது.



Tags : UN ,Noor Wali Mehsud ,TTP ,Pakistan , Terrorist, UN
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது