×

கொடைக்கானலில் தரமற்ற தார்ச்சாலை பணி கண்டித்து மக்கள் தர்ணா

கொடைக்கானல்: கொடைக்கானல் வில்பட்டி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்டது குறிஞ்சி நகர் கிராமம். இங்கு சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிகவும் பழுதான நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து பிரதம மந்திரி கிராம இணைப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த பல மாதங்களாக இந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வந்தது. முதற்கட்டமாக பெரிய மெட்டல்கள் நிரப்பப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த பல தினங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. மூன்று கி.மீ தூரத்திற்கு  இந்த சாலை அமைக்கப்பட்டது.  

இந்நிலையில்  இந்த தார்ச்சாலை பணி தரமற்ற நிலையில் இருப்பதாக  கிராம மக்கள் குற்றம் சாட்டி தர்ணா போராட்டம் செய்தனர். பல இடங்களில் இந்த தார்ச்சாலை சேதம் அடைந்து உள்ளது. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தார்சாலை பணியை தரமானதாக போடவேண்டும். சேதமடைந்த புதிய தார்ச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்று ஒப்பந்ததாரர், அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள சிறு பாலங்கள் சேதமடைந்து உள்ளது.இதனால் இப்பகுதிக்கு சென்று வரும் சாலைகள் சேறும், சகதியுமாக  மோசமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே இந்த சிறுபாலங்களையும் சீரமைத்து தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal ,darshala , People protest,substandard factory ,work , Kodaikanal
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...