×

செய்யாத வேலைக்கு கூலி கேட்கும் தொழிலாளர்களை கண்டித்து ஈரோட்டில் கடையடைப்பு போராட்டம் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு

ஈரோடு: தினக்கூலி தொழிலாளர்கள் செய்யாத வேலைக்கு கூலி கேட்டு நிர்பந்தம் செய்வதாக கூறி ஈரோட்டில் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் சார்பாக நேற்று  கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் சுமார் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பார்க்ரோடு, புது மஜீத் வீதி, குப்பக்காடு, ஸ்டார் தியேட்டர் ரோடு, கந்தசாமி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல குஜராத், மும்பை, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து ஹார்டுவேர் பொருட்கள், சைக்கிள், கிளாஸ், கார்மெண்ட்ஸ் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த பகுதிகளில் மட்டும் 70க்கும் மேற்பட்ட குடோன்கள் உள்ளன. இங்கு சரக்குகளை ஏற்றி, இறக்க தொழிலாளர்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தினக்கூலி பணியாளர்கள் அன்றாட வேலைக்கு அதிக அளவு கூலி கேட்பதாகவும், செய்யாத வேலைக்கு கூலி கேட்டு நிர்பந்தம் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.  இப்பிரச்னை  நீடித்து வரும் நிலையில் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் சார்பாக இனி செய்யாத வேலைக்கு கூலி தருவதில்லை என்றும், அனைத்து லாரி நிறுவனங்களிலும் தங்களுக்கு விருப்பமான தொழிலாளர்களை கொண்டு வேலை செய்து கொள்ள நீதிமன்றம் மூலமாக உத்தரவு பெற்றுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இதற்கு தினக்கூலி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிக கூலி கேட்டு நிர்பந்தம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்து ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் சார்பாக நேற்று  ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ஈரோட்டில் அனைத்து கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அலுவலகங்களும் மூடப்பட்டு சரக்குகள் அனுப்புவது நிறுத்தப்பட்டது. இதன் மூலமாக 200 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் ஈரோடு தலைவர் கலைமணி, செயலாளர் பிங்களன் ஆகியோர் கூறியதாவது:

 ஈரோட்டில் உள்ள கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் கூலியையும் உயர்த்தி கேட்டும், செய்யாத வேலைக்கு கூலி கேட்டும் தொந்தரவு கொடுக்கிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கால் தொழில்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டாய கூலியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளோம். இனிவரும் காலங்களில் செய்யாத வேலைக்கு கூலி தருவதில்லை. நிர்வாகத்தின் எந்தவொரு முடிவிலும் தினக்கூலி தொழிலாளர்கள் தலையிடக்கூடாது. தேவையான தினக்கூலி தொழிலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று சங்கத்தில் முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Shoplifting strike ,Erode , Rs 200 crore , impact, Erode due,strike
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...