×

வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் 10,000 கிலோ மக்காச்சோளம் தேக்கம்: தஞ்சை விவசாயிகள் வேதனை

ஒரத்தநாடு: கொரோனா தொற்று பாதிப்பால் வெளிமாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் 10 ஆயிரம் கிலோ மக்காச்சோளம் தேக்கமடைந்ததால் தஞ்சை விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த உஞ்சியவிடுதி, தட்டாண்விடுதி, அம்மன்குடி, காரியவிடுதி உள்ளிட்ட 25 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்குமேல் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் சோளம் பயிரிட்டு தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் வெளிமாவட்டங்களில் இருந்து கடந்த ஒரு மாதமாக வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் 10 ஆயிரம் கிலோ மக்காச்சோளம் கிடப்பில் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உஞ்சியவிடுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் கூறுகையில், ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் சோளம் பயிரிட்டு ஜூலை மாதம் அறுவடையை துவங்குவோம். கடந்தாண்டுகளில் பொள்ளாச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சையில் உள்ள மொத்த வியாபாரிகள் சோளத்தை மொத்தமாக கொள்முதல் செய்து வெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்து வந்தனர். மக்காச்சோளத்தை கோழி தீவனம் மற்றும் பிஸ்கட் போன்ற உணவு பண்டங்களை தயாரிப்பதற்காக வாங்கி செல்வர். தற்போது கொரோனா தொற்றால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் ஒரத்தநாடு பகுதியில் 10 ஆயிரம் கிலோ மக்காச்சோளம் தேங்கியுள்ளது என்றார்.

கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
அமெரிக்கன் படைப்புழு தாக்கியதால் மக்காச்சோளம் விளைச்சல் 50 சதவீதம் குறைந்து விட்டது. கடந்தாண்டு சோளம் பயிர் ஒரு குவிண்டால் ரூ.2,700 விற்பனை செய்து வந்த நிலையில், இந்தாண்டு குவிண்டால் ரூ.1400 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்த தொகையாவது கிடைக்குமா என்பது கேள்வி குறியாகியுள்ளது விவசாயிகளுக்கு பலலட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே நெல்லுக்கு கொள்முதல் நிலையம் திறப்பது போல், சோள பயிருக்கும் நேரடி கொள்முதல் நிலையம் திறந்தால் தான் விவசாயிகளை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : non-arrival ,Tanjore ,outstation traders , 10,000 kg,maize stagnates ,non-arrival , outstation traders, Tanjore farmers suffer
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை