×

செல்போனில் பலமணி நேரம் செலவழிப்பதால் மன அழுத்தத்திற்கு தள்ளப்படும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்: ஆன்லைன் வகுப்புகளால் பார்வை பாதிக்கும் அபாயம்

சேலம்: ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனில் பல மணி நேரம் செலவழிப்பதால் ஆசிரியர்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பார்வை குறைபாடு ஏற்படும் அபாயமும் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறையாததால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகளில் ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். இந்த ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் பல மணிநேரம் செலவழிப்பதால் அவர்களுக்கு பார்வை குறைபாடும், மன அழுத்தமும் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர். இதில் ஆன்லைன் வகுப்பு, ஆப்லைன் வகுப்பு, டெமோ கிளாஸ் என்ற வகையில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பு என்றால் ஆசிரியர், மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் பாடம் நடத்துவதாகும். ஆப்லைன் வகுப்பு என்றால் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை செல்போனில் படம் பிடித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அந்த படக்காட்சியை பார்த்து வீட்டு பாடம் எழுதி சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு செல்போனில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு வீட்டு பாடம் எழுதும் மாணவர்களுக்கு தினசரி வருகை பதிவேடு அளிக்கப்படுகிறது.

டெமோ கிளாஸ் என்றால் தனியார் இன்ஸ்டியூட் நிறுவனம் ஆசிரியர்களுக்கு ஒரு லிங்க் அனுப்புவார்கள். அந்த லிங்கில் ஆசிரியர்கள் சேர்ந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட இன்ஸ்டியூட் மூலம் ஆன்லைன் வகுப்பு எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக ஆசிரியர்கள் பல மணிநேரம் அந்த லிங்கில் தொடர்பு கொண்டவாறு இருக்க வேண்டும். இந்த டெமோ கிளாஸ் லிங்க் இருக்கும் கடைசி வரை தொடர்பில் இருப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட இன்ஸ்டிட்யூட் மூலம் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒருபக்கம் மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்பில் பல மணிநேரம் செல்போனில் ஆசிரியர்கள் செலவழிக்கின்றனர். மறுபுறம் இன்ஸ்டியூட் நிறுவனத்தினர் டெமோ கிளாஸ் என்ற பெயரில் பல மணிநேரம் செல்போனில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

இதுபோன்ற வகுப்புகளுக்காக ஆசிரியர்கள் நாள் ஒன்றுக்கு 5 முதல் 8 மணிநேரம் செல்போனில் செலவழிக்க வேண்டியுள்ளது. தொடர்ந்து பல மணிநேரம் ஆசிரியர்கள் செல்போனில் இருப்பதால், அவர்களுக்கு பெரும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மேலும் அதிகம் நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதால் பார்வை குறைபாடும் ஏற்படுகிறது என்று டாக்டர்கள் ஏற்கனவே அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆனாலும் கடந்த ஒன்றரை மாதமாக ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புக்காக பல மணிநேரம் செல்போனில் தான் செலவழித்து வருகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு பார்வை குறைபாடுகளும் ஏற்படுமோ? என்ற அச்சம் பெரும்பாலான ஆசிரியர்களிடம் உள்ளது.

ஆசிரியர்கள் மட்டுமன்றி மாணவர்களும், ஆன்லைன் வகுப்புக்காக பல மணிநேரம் செல்போனை கூர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது. இது அவர்களுக்கும் சிறுவயதிலேயே பார்வை குறைபாடுகளை ஏற்படுத்தி விடும் என்ற அச்சமும் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை களைய ஆன்லைன் வகுப்புகளுக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

பயிற்சி அளிப்பதால் சிரமம்
பள்ளிகளில் ஒரே அறையில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அடைத்து வைத்து ஆன்லைன் வகுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருந்தாலும், அறையில் உள்ள அனைவருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் வரை கூட்டமாக வைத்து பயிற்சி வகுப்புகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதும் ஆசிரியர்களின் கோரிக்கை.

Tags : Private school teachers , Private School Teachers, Depressed ,Spending Many Hours, Risk of Visual Impairment,Online Classes
× RELATED கொரோனாவால் குறைக்கப்பட்ட சம்பளம்...