×

அரசு விற்பனை செய்யும் மதுவை வாங்கி குடித்து வீசப்பட்டவை விவசாயம் செய்ய வந்த விளைநிலத்தில் மதுபாட்டில்களை அறுவடை செய்த விவசாயிகள்: அரக்கோணம் அருகே பாணாவரத்தில் பரபரப்பு

பாணாவரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் கோரத்தாண்டம் ஆடிவரும் நிலையில், அத்திபூத்தார்போல் பெய்துவரும் மழையை பயன்படுத்தி, மிஞ்சியுள்ள நிலங்களில் விவசாயம் செய்து பிழைத்து, மற்றவர்களின் வயிற்றையும் நிரப்பி வருகின்றனர் விவசாயிகள். அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் பகுதியில் உள்ள வானம் பார்த்த பூமியில், பெரும்பாலான விவசாயிகள் மழையை நம்பி, ஆடிப்பட்டத்துக்கு வேர்க்கடலை, சோளம், கம்பு, உளுந்து, காராமணி, துவரை, மொச்சை உள்ளிட்ட பணப்பயிர்களை விவசாயம்  செய்ய நிலங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பருவ மழை பெய்து வருகிறது. அதனை பயன்படுத்தி வானம் பார்த்த விளைநிலங்களை உழுது தானியங்களை பயிரிட விவசாயிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விவசாய நிலத்தை உழுவதற்காக சென்ற விவசாயிகள் விவசாய நிலம் முழுவதும் மதுபான காலி பாட்டில்கள் நிறைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு விற்பனை செய்யும் மதுவை குடித்துவிட்டு காலி மதுபாட்டில்களை குடிமகன்கள் ஆங்காங்கே குவியல் குவியலாக வீசியிருந்தனர். அத்துடன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட், டம்ளர்களும் வீசப்பட்டிருந்தது. அவற்றை விவசாயிகள் சேகரித்தனர். வியர்வை சிந்தி விவசாயம் செய்துவந்த விளைநிலங்களில் உடைந்து கிடந்தவை உட்பட மதுபாட்டில்களை அறுவடை செய்யும் பரிதாப நிலை வந்து விட்டதே, விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் சூழலில் இப்படி விளைநிலங்களில் மதுபாட்டில்களை வீசினால் எப்படி விவசாயம் செய்ய முடியும்? நூலகங்களின் எண்ணிக்கையை விட அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இப்படி இருப்பதால் தான் நூல்களை பிடிக்கும் கைகளில், மாணவர்கள் மதுபாட்டில்களை பிடித்துக்கொண்டு வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். விளைநிலங்களில் குவியல் குவியலாக கிடந்த மதுபாட்டில்களால் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Arakkonam ,Panavaram ,farm , Farmers ,sold government-sold liquor , bottles of liquor , cultivate, Panavaram , Arakkonam
× RELATED பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது