×

சிமென்ட் கலவை லாரியை கடத்திய டிரைவர் கைது

ஊத்துக்கோட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாரி அலுவலகம் உள்ளது. இதில், சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (58) என்பவர் 8 வருடங்களாக அந்த கம்பெனியில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13ம் தேதியன்று சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் சிமென்ட் கலவையை இறக்கிய பிறகு லாரி எனக்கு தேவை நான் எடுத்துச்செல்கிறேன் என டிரைவர் ராமச்சந்திரன்  அலுவலக மேலாளரிடம் போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு பிறகு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

இது குறித்து மேலாளர் கோவிந்தசாமி பல முறை லாரி டிரைவரிடம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், டிரைவரின் போன் லைன் கிடைக்கவில்லை. பின்னர், அவர் லாரியில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் லாரி எந்த பக்கம் வருகிறது என்பதை தெரிந்து கொண்டார். பின்னர், திருவள்ளூர் மாவட்டம்  ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் லாரியை டிரைவரே கடத்திச்செல்வதாக புகார் கொடுத்தார். பின்னர், எஸ்பி அரவிந்தன் உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.ஐ.ராக்கிகுமாரி மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டை ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த சிமென்ட் கலவை லாரியை மடக்கினர். ஆனால், லாரி நிற்காமல் சென்றது. இதையறிந்த போலீசார் லாரியை விரட்டிச்சென்று ஊத்துக்கோட்டை நான்கு முனை சந்திப்பு அண்ணாசிலை பகுதியில் மடக்கி
பிடித்தனர்.பின்னர், லாரி டிரைவர் ராமச்சந்திரனை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் மதிப்பு ரூ. 40 லட்சம் ஆகும்.

Tags : Cement compound, truck, hijacked, driver arrested
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு