×

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்தியாவுக்கு 2வது முறையாக அனுமதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தான் ராணுவத்தினரால் 2016ல் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2017ல் இந்நாட்டு ராணுவ நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனைத் தொடர்ந்து, அவரது மரண தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும், அவருக்கு தூதரக உதவிகள் பெற பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்கவும் உத்தரவிட்டது.

இதனிடையே, தனது மரண தண்டனைக்கு எதிராக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஜாதவ் மறுப்பு தெரிவித்ததாக, பாகிஸ்தான் அரசின் அட்டர்னி ஜெனரல் அகமது இர்பான் கடந்த வாரம் தெரிவித்தார். இதை இந்தியா மறுத்தது. இந்நிலையில், குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து பேச, பாகிஸ்தான் அரசு நிபந்தனையற்ற அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இருவர், ஜாதவை மாலை 3 மணிக்கு சந்திக்க  நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றத்துக்கு அளித்த வாக்குறுதியை பாகிஸ்தான் அரசு நிறைவேற்றி உள்ளது. இந்தியாவும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஜாதவ் இரண்டாவது முறையாக தனது நாட்டின் தூதரக அதிகாரிகளை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்தாண்டு செப்டம்பர் 2ம் தேதி, அவர் முதல் முறையாக தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளார்,’ என கூறப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று மாலை இந்திய தூதரக அதிகாரிகள் சிறைக்கு சென்று யாதவை சந்தித்து பேசியுள்ளனர். ஆனால், அதன் விவரம் வெளியிடப்படவில்லை.

Tags : jail ,India ,Pakistani ,Kulbhushan Jadhav , Permission to meet Pakistani prisoner, Kulbhushan Jadhav, India, 2nd time
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...