×

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் டாக்டர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை: ஒரு வாரத்தில் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில், 26 பேருக்கும், மருத்துவர்களுக்கும், இயக்குனருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மனநல காப்பகத்தில் உள்ள 20 வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 800 பேருக்கும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அனைத்துவித மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் செயலாளர் நம்பிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களால் நோய் தொற்றின் அறிகுறிகள் பற்றி எடுத்துக் கூற இயலாது. மனநல காப்பகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுடன், கொரோனா பரிசோதனை செய்யப்படாதவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலோ, புதிதாக கிங் இன்ஸ்டிடியூட்டில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையிலோ அனுமதிக்க வேண்டும். அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனநல காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்து வருவதாகவும், எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை என்று தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர் முத்துகுமார் தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் கார்ல் மார்க்ஸ், மனநல காப்பகத்தில் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிறப்பு கவனம் வழங்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களால்தான் அவர்களை நன்றாக கவனிக்க முடியும் என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பு விளக்கத்தை மறுப்பதற்கில்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் மதிப்பது போலத்தான் அவர்களையும் நினைக்க வேண்டும். மனநல காப்பகத்தில் சிகிச்சையில் உள்ள 800 பேருக்கு மட்டுமல்லாமல், மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டன்கள், சமையல்காரர்கள் என அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு வாரத்தில் இந்த பரிசோதனைகளை முடிக்க வேண்டும். அதில் கிடைக்கும் முடிவுகளை பொறுத்து எந்த மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதை அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : examination ,doctors ,Corona ,High Court , Subordination, Psychiatric Archive, Doctors, All, Corona Examination, High Court
× RELATED இறுதி ஆண்டு சட்டப்படிப்பு தேர்வோடு,...