×

வேதா இல்ல சாவியை ஒப்படைக்கக் கோரி வழக்கு: ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் தொடர்ந்தார்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையை கைவிட்டு, வீட்டு சாவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன்  தீபக் தொடர்ந்த வழக்கை, நீதிபதி கிருபாகரன் அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிடும்படி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் பங்களாவை கையகப்படுத்துவது தொடர்பான விசாரணைகளை கைவிட்டு, வீட்டு சாவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், வேதா நிலையம் வீடு, தனது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயில் எழுதி வைத்திருந்தார். அந்த இல்லத்தை கோயில் போல பயன்படுத்திய தனது அத்தை ஜெயலலிதா, முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளை அந்த வீட்டிலேயே நடத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு தடை விதிக்க வேண்டும். வேதா நிலையத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரரையும் அவரது சகோதரியையும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவித்த உயர் நீதிமன்றம், அறக்கட்டளை அமைத்து 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கும், இரு நீதிபதிகள் அமர்வில் உள்ள வழக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால், இந்த வழக்கையும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்புவதே சரியாக இருக்கும். இரு வேறு தீர்ப்புகள் வருவதைத் தவிர்க்க இந்த வழக்கை, இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

Tags : Deepak ,Veda ,Jayalalithaa , edha's house key, demanded to be handed over, the case, Jayalalithaa, nephew Deepak, continued
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...