×

கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்திரன் புதுவையில் சரண்: சென்னைக்கு அழைத்து வர விரைந்தது மத்திய குற்றப்பிரிவு போலீசார்

சென்னை: கந்த சஷ்டி குறித்து அவதூறு பதிவு செய்த கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவரை, சென்னைக்கு அழைத்து வர மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜக மற்றும் இந்துமக்கள்கட்சி- தமிழகம் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், கருப்பர் கூட்டம் என்ற பெயரில் யூ-டியூப் சேனலில் சரஸ்வதி தேவி குறித்து மிகவும் இழிவாக பதிவிட்டு அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் கடவுளான முருகக்கடவுள் குறித்தும், கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக பேசி அசிங்கப்படுத்திய சுரேந்திரன் நடராஜன், தயாரிப்பாளர் மற்றும் கேமராமேன், எடிட்டர் மற்றும் நிர்வாகத்தினர் ஆகிய அனைவரும் சேர்ந்து குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி உள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டு கட்சிகள் அளித்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேளச்சேரி பகுதியை சேர்ந்த செந்தில்வாசன்(49) என்பவரை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில்  தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரான சுரேந்திரன்  மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர், கேமராமேன் உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலின்  தொகுப்பாளரான சுரேந்திரன் நேற்று புதுச்சேரி மாநிலம் அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து புதுச்சேரி போலீசார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.


Tags : crowd ,Chennai ,Surendran Puduvayil Charan: Central Crime Branch , Black Meeting U-Tube Channel, Host Surendran, Puthuvai Charan, Chennai, Central Crime Branch Police
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...