×

கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி இறுதித் தேர்வை எழுதும் மாணவர்கள் அதிகளவு பெயிலாவது ஏன்? முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

சென்னை: மூன்று ஆண்டுகளில் பள்ளி இறுதித் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது ஏன் என முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிகள் வாயிலாக இறுதிப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கின்றது. அதாவது 2017- 8,93,262, 2018-8,60,434, 2019-8,42,512, 2020- 7,79,931. சுருக்கமாக 2017ல் 8.93 லட்சமாக இருந்த தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை, 2020ல் 7.79 லட்சமாகக் குறைந்திருக்கின்றது. அதாவது, ஏறத்தாழ 1.14 லட்சம் மாணவர்கள்கடந்த மூன்று தேர்வுகளில் ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாகக் குறைந்து வந்திருக்கின்றார்கள்.

இவ்வளவு பெரிய சரிவு தொடர்ச்சியாக ஏற்பட என்ன காரணம்?. கடந்த மூன்றாண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சிக்குப்பின் பதினோராம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை என்ன?. அதில் எத்தனை மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதினார்கள்?. பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வும், மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட பாடச்சுமையும் இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு எந்த வகையில் காரணிகளாக அமைந்திருக்கின்றன? இவர்களில் மிகப்பலர் அரசுப்பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருந்திருக்க முடியும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை இதுகுறித்து என்ன நடவடிக்கை இதுவரை எடுத்திருக்கின்றது?. இச்சூழல் நீடித்தால் உயர்கல்விக்குச் செல்லும் நமது மாணவர்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறையும் சூழல் உருவாகி அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடாதா? இவற்றை விளக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா?! இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : South , past three years, school final exams, students writing, high fail, former minister Gold South, question
× RELATED புதுச்சேரி மத்திய பல்கலை.யில்...