தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா: மகன், மருமகனுக்கும் வைரஸ் பாதிப்பு

சென்னை: தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 6 கட்டங்களாக வரும் 31ம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், மற்ற மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே இவரது மகன் மற்றும் மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அமைச்சருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த சில தினங்களாக அமைச்சருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் முதன்முதலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அமைச்சர் கே.பி. அன்பழகன் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.

இதை தவிர்த்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மின்சார துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தில் 4வது அமைச்சராக நிலோபர் கபிலுக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதை தவிர்த்து, அதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், அதிமுகவின் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதிமுகவின் கலை இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 அமைச்சர்கள் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு அமைச்சர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: