×

தங்கராணி சொப்னா வழக்கு சூடு பிடிக்கிறது கேரள முதல்வரின் செயலாளர் சஸ்பெண்ட்: தமிழக அதிகாரிகள் உதவியுடன் தப்பிய சொப்னா

* துபாய் தப்பிச் சென்றார் துணை தூதர்
* 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கடத்தலில் தொடர்பா?

திருவனந்தபுரம்: தங்கராணி சொப்னா விவகாரத்தில் கேரளா முதல்வரின் செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐக்கிய அரபு அமீரக துணை தூதர் யாருக்கும் தெரியாமல் 4 நாட்களுக்கு முன் ரகசியமாக துபாய் சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணை தூதர் பொறுப்பில் உள்ள ராஷித் அல் சலாமியின் பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் அந்த தூதரகத்தில் பணியாற்றிய சொப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த சொப்னா, கேரளா மாநில அரசையே அதிகாரிகள் துணையுடன் ஆட்டிப்படைத்து வந்தார் என்பது தெரியவந்தது. இதற்கிடையில், தங்க கடத்தல் குறித்து துணை தூதரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா மற்றும் என்ஐஏ அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர்.

இதற்காக மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டிருந்தது. மேலும், தங்கராணி சொப்னா யார் யாருடன் பேசுகிறார் என்பது குறித்த விபரங்களை சுங்க இலாகா மற்றும் என்ஐஏ அதிகாரிகள் சேகரித்தனர். இதில் பார்சல் வந்த ஜூலை 3ம் தேதிக்கும் 5ம் தேதிக்கும் இடையே தூதர் ராஷித் அல் சலாமி, சொப்னா மற்றும் கூட்டாளி சரத்குமாரிடமும் பேசியிருப்பது தெரிய வந்தது. தூதரும் சொப்னாவும் ஜூன் 1ம் தேதி முதல் அந்த மாதம் மட்டும் 117 தடவையும், ஜூலை 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை 35 முறையும் பேசியுள்ளனர். ஜூலை 3ம் தேதி இருவரும் 20 முறை பேசியுள்ளனர். இதையடுத்து தங்க கடத்தலில் தூதருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் என்ஐஏவுக்கு வலுத்தது.

எப்படியும் சொப்னா விவகாரத்தில் நம்மையும் அதிகாரிகள் கைது செய்வார்கள் என்ற பீதியில் இருந்த திருவனந்தபுரம் அமீரக தூதர் ராஷித் அல் சலாமி ரகசியமாக துபாய் சென்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிறு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற இவர் புதன் கிழமை அங்கிருந்து துபாய் சென்றுள்ளார். நேற்று வரை இந்த விபரம் கேரள அரசுக்கோ போலீசுக்கோ தெரியாது. வழக்கில் இருந்து தப்பிக்க அவர் தப்பி சென்றாரா அல்லது ஐக்கிய அரபு அமீரகம் அவரை திரும்ப அழைத்துக்கொண்டதா என்ற விபரம் என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரியவில்லை. இதையடுத்து தங்க கடத்தலில் ராஷித் அல் சலாமிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த மத்திய அரசிடம் என்ஐஏ மற்றும் சுங்க இலாகா மீண்டும் அனுமதி கோரியுள்ளது.

என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து தங்கராணி சொப்னா சுரேஷ் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் அருகே அடுக்குமாடி  குடியிருப்பில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் சொப்னா சுரேசுக்கும் தனித்தனி பிளாட்கள் உள்ளன. இந்த குடியிருப்பு உரிமையாளரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முதல்வரின்  கட்டுப்பாட்டில் உள்ள ஐடி துறையில் ஐடி பூங்கா இயக்குநராகவும்,  முதல்வரின்  ஐடி ஆலோசகராகவும் இருந்து வரும் அருண் பாலசந்திரன் என்பவர்  இந்த பிளாட்டை முன் பதிவு  செய்தது தெரியவந்தது.

சொப்னாவுக்காக இவர் பிளாட் வாடகைக்கு எடுத்து கொடுத்த தகவல் வெளியானதும் இரு பதவிகளில் இருந்தும் அருண் மாற்றப்பட்டார். அருண் பாலசந்திரனுக்கு முக்கிய அரசியல், சினிமா பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் தனது பேஸ்புக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா துறையினருடன் இருக்கும் படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது இந்த பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் அருண் பாலசந்திரன், நான் எந்த தவறும் செய்யவில்லை. சிவசங்கரை காப்பாற்ற என்னை பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.

ஐடி துறையில் சேர்வதற்கு முன்னரே சொப்னா சுரேஷுடன் சிவசங்கருக்கு தொடர்பு உண்டு என்று கூறியுள்ளார். ஆனால் சொப்னாவும், சிவசங்கரும் ஒரே அபார்ட்மென்ட்டில் வசித்ததால், தினமும் அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள். வாரம் ஒரு முறை அல்லது இரு முறை வீட்டில் பார்ட்டி வைப்பார்கள். அதில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். மதுவுடன், பாட்டுக்கச்சேரியும், நடனமும் நடைபெறும். பெண்கள் சப்ளையும் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சிவசங்கரனுக்கு சொப்னா மீது தனி பிரியம் உண்டாம். இதனால் அவர் என்ன சொன்னாலும் செய்து கொடுக்க தயாராக இருந்தாராம்.

இதனால்தான், தான் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளாராம். தங்க கடத்தலில் சிவசங்கரனுக்கு உள்ள தொடர்பு குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 2 பேர் கைது: இதற்கிடையில், தங்கம் கடத்திய வழக்கில் சரித்குமார், சொப்னா, சந்தீப் நாயர், ரமீஸ், ஜலால், முகமது ஷபி, ஹம்ஜத் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலிடம் இருந்து 2 பேர் கிலோ கணக்கில் தங்கம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அன்வர்  மற்றும் செய்யது அலதி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சிவசங்கர் சஸ்பெண்ட்: சிவசங்கர் குறித்து விசாரிக்க கேரள தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் ஒரு குழுவை முதல்வர் பினராயி விஜயன் நியமித்திருந்தார். இந்த குழு விசாரணை அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் பினராய் விஜயன் இதை தெரிவித்தார். அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கடைபிடிக்கவேண்டிய சட்ட நெறிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் ஒரு ஏடிஜிபி மற்றும் ஒரு எஸ்பிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அடிக்கடி, சொப்னாவின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். இது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 11ம் தேதி பெங்களூரில் தலைமறைவாக  இருந்த சொப்னா மற்றும சந்தீப் நாயர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டனர். இவர் தமிழ்நாட்டில் இ-பாஸ் எடுத்து சென்றது தெரிய வந்தது. கடந்த 9ம் தேதி கொச்சியில் இருந்து திருச்சூர், வாளையார் வழியாக தமிழகம் சென்று பின்னர் பெங்களூர் சென்றது தெரிய வந்துள்ளது. திருச்சூர் டோல்கேட், வாளையார் டோல் கேட்களில் அவரது கார் செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பட்டப்பகலில் இவர் தமிழகம் வழியாக தப்பி சென்றிருப்பதால் இவருக்கு கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகள் உதவி கிடைத்திருக்கும் என்று கருதப்படுகிறது.

* பைசல் பரீத் பாஸ்போர்ட் ரத்து
தங்க கடத்தல் வழக்கில் 3ம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திருச்சூரை சேர்ந்த பைசல் பரீத் துபாயில் உள்ளார். அவர் அங்கு பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இதனால் இவர் துபாயில் இருந்து தங்கத்தை அனுப்பி வைத்திருக்கலாம்  என்று கருதப்படுகிறது. இவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை என்ஐஏ நாடியுள்ளது. இந்நிலையில் அவர் தலைமறைவானார். அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. இது குறித்த தகவலை துபாய் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் பயண தடை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Thangarani Sopna ,Tamil Nadu ,Chief Minister ,Kerala ,Sopna , Thangarani Sopna, case, Secretary to the Chief Minister of Kerala, suspended, assisted by Tamil Nadu authorities, escaped Sopna
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்