×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை : காவலர் முத்துராஜுக்கு மேலும் ஒருநாள் சிபிஐ காவல், 4 காவலர்களுக்கு ஜூலை 30 வரை நீதிமன்ற காவல்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 4 காவலர்களுக்கு ஜூலை 30 வரை நீதிமன்ற காவல்  அளிக்கப்பட்டுள்ளது. மதுரை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த்குமார், 4 பேரையும் 30ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலர் முத்துராஜை மேலும் ஒருநாள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ததில் இருந்தே முத்துராஜ் ஒரு முக்கிய சாட்சியமாக காவல்துறையால் கருதப்பட்டு வருகிறார். ஆய்வாளர் மற்றும் 2 சார்பு ஆய்வாளர்களை கைது செய்த பின்பும் முத்துராஜ் மட்டும் தலைமறைவாக இருந்தார். முத்துராஜ் காவல்துறையினருக்கு எதிர்த்து சாட்சியாக மாறுவார் என்று ஐயப்பாடும் எழுந்திருந்தது. இந்நிலையில் முத்துராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிபிஐ விசாரணை மேற்கொண்ட முதல் நாளே முத்துராஜை மட்டும் தனியாக சாத்தான்குளத்திற்கு அழைத்து சென்று சாத்தான்குளம் காவல்நிலையம், கடைவீதி, சிறைச்சாலை பகுதிகளிலும் விசாரணை நடத்தியது. சிபிஐ தரப்பில் முத்துராஜ் மட்டும் தனியறையில் வைத்து விசாரணை செய்து வருவதாக கூறி வந்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று நீதிமன்றத்தில் ஆய்வாளர், துணை ஆய்வாளர் என அனைவரையும் விட்டுவிட்டு  முத்துராஜிற்கு மட்டும் மேலும் ஒருநாள் அவகாசம் வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. அதன் காரணத்தை பதிவு செய்த நீதிபதிகள் காவலர் முத்துராஜிற்கு மட்டும் மேலும் ஒருநாள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளனர். விசாரணையை பொறுத்தவரை 3 நாட்களாக வாங்கப்பட்ட சாட்சியங்கள், மேற்கொண்டு யாரெல்லாம் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பதை மேலும் உறுதியாக ஆவணப்படுத்துவதற்காக தான் முத்துராஜ் காவல் இருக்குமென்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 நாள் சி.பி.ஐ விசாரணை முடிந்து 5 காவலர்கள் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 5 பேரை சி.பி.ஐ 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை, காவலர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.



Tags : Muthuraj ,CBI ,Sathankulam ,policemen ,murder , Sathankulam, father, son, murder, CBI
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...