×

சேலத்தில் நூல் கடையில் திடீர் தீ விபத்து...! ரூ.5 லட்சம் மதிப்பிலான நூல் பண்டல்கள் எரிந்து நாசம்!!!

சேலம்:  சேலம் மாவட்டம் சின்னக்கடைவீதி அருகில் நூல் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 5 லட்சம் மதிப்பிலான நூல் பண்டல்கள் எரிந்து நாசமாகின. சேலம் சின்னக்கடை வீதி அருகிலுள்ள வ.உ.சி பூ மார்க்கெட்டுக்கு பின்புறத்தில் சரவணன் என்பவருக்கு சொந்தமான நூல் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த பகுதியில் பூ மார்க்கெட் அதிகமாக செயல்பட்டு வருவதால், நூல் மற்றும் நார் உள்ளிட்டவற்றை அதிகளவில் விற்பனை செய்யும் கடையாக இந்த நூல் கடை அமைந்துள்ளது.

இந்நிலையில், சரவணன் என்பவருக்கு சொந்தமான கடையில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து கடை உரிமையாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது தீ மளமளவென எரிந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்ற கடைகளுக்கு பரவாமல் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில், நூலானது எளிதில் எரியக்கூடியவை என்பதால் கடையில் உள்ள அனைத்து நூல் பண்டல்களும் முழுவதுமாக எரிந்து நாசமாகின. அதாவது 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல் பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், இந்த தீ விபத்தானது மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : yarn shop ,Salem , Sudden fire at a yarn shop in Salem ...! Bundles of yarn worth Rs 5 lakh destroyed by fire !!!
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...