×

பழநியில் நான்கு வழிச்சாலை பணிகள் துவக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பழநி:பழநி வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை ஆயத்த பணிகள் துவங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் பொள்ளாச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.3 ஆயிரத்து 648 கோடி மதிப்பில் நடைபெறும் இப்பணிகள் நடைபெறுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (நகாய்) மூலம் பொள்ளாச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்-83)யில் இப்பணி 131.95 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.    
 
திண்டுக்கல், கமலாபுரம் முதல் ஒட்டன்சத்திரம் வரை 36.50 கி.மீ. தூரம் ஒரு பகுதியாகவும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநி வழித்தடத்தில் மடத்துக்குளம் வரை 45.38 கி.மீ. தூரம் வரை ஒரு பகுதியாகவும், மடத்துக்குளத்தில் இருந்து பொள்ளாச்சி வரை 50.07 கி.மீ. தூரம் ஒரு பகுதி என 3 பகுதிகளாக டெண்டர் விடப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள நான்கு வழிச்சாலை க்கு குறுக்கே வரும் மாநில ஊரகச் சாலைகள் பாதிக்கப்படாமல் இருக்க 60 இடங்களில் கீழ் பாலங்களும், சண்முகநதி மற்றும் அமராவதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும் அமைக்கப்பட உள்ளது.

நான்கு வழிச்சாலையில் இருந்து நகரங்களுக்குள் நுழைவதற்கு வசதியாக அணுகு சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. நான்கு வழிச்சாலை பணிக்காக 2 ஆயிரத்து 429 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாய நிலங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆங்காங்கு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.  இதன்படி பழநி பகுதியில் தற்போது நான்கு வழிச்சாலைக்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளன. பழநி-புதுதாராபுரம் சாலையில் மால்குடி மருத்துவமனை அருகில் நான்கு வழிச்சாலைக்கான நிலம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. சண்முகநதி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியும் துவங்கி உள்ளன.

இச்சாலைய அமைக்கப்பட்டால் மதுரை-கோவை இடையே சில மணி நேரங்களில் பயணித்து விடும் சூழல் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : Launch , Palani, four-lane works, public
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!