×

ஆயுர்வேத கல்லூரி பின்வாசல் பகுதிக்கு கணேசபுரம் மீன் சந்தை இடம் மாற்றம்: அதிகாரிகள் ஆய்வு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கொரோனா தொற்று அனைத்து பகுதிகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக  பொதுமக்கள் அதிகம் கூடும் மீன் சந்தைகள் மூடப்பட்டன. வடசேரி பஸ் நிலையத்தில்  தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தற்காலிக  சந்தையும் மூடப்பட்டது. கோட்டாறு பகுதியிலும் கொரோனா தொற்று காரணமாக  பல  மொத்த விற்பனை கடைகளில் கூட கடையின் நம்பிக்கைக்கு உரிய பணியாளர்களே கடைகளை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பல்வேறு மொத்த விற்பனை கடைகளில், கடை உரிமையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை ஒரு மீட்டருக்கு அப்பால் தள்ளி நின்று வாங்கும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளனர்.  

இந்நிலையில், கோட்டாறு கணேசபுரம் மீன் சந்தைக்கு மாற்றிடம் குறித்து,  மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், ஆர்.டி.ஒ மயில்,கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்தனர்.  அப்போது ஆயுர்வேத மருத்துவ கல்லூரியின் பின்புற வாசல் பகுதி சுத்தம் செய்யப்பட்டு, அங்கு மீன்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அதிகாரிகள் முன்னிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் மீன் வியாபாரிகள் கல்லூரி பின்புற வாசலில் கடைகள் அமைத்து விற்பனையை தொடங்கினர். அதிகாரிகள்  நடவடிக்கைக்கு வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

அப்போது  சில வியாபாரிகள் கல்லூரி வாயில் அருகே முன்பு பிணவறை செயல்பட்டதால் வேறு இடம் வேண்டும் என்றனர். இதற்கு அதிகாரிகள், மாநகர் முழுவதும் வியாபாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சந்தைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு  வருகின்றன. எனவே தேவையற்ற விவாதங்கள் செய்யாமல் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும், சுகாதாரமற்ற முறையில் மீன் விற்பனை செய்யக்கூடாது, அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி, சாலையை ஆக்ரமிப்பு செய்யக்கூடாது என ஆர்.டி.ஓ மயில் எச்சரிக்கை செய்தார். இதனையடுத்து வியாபாரிகள் அதிகாரிகள் கூறியபடி கடைகளை அமைப்பதாக கூறினர். இதுபோல்  மீன் கடைகள் அமைக்கப்பட்டால், சுத்தம் செய்வது யார்? என பொதுமக்கள் தரப்பில்  கேட்டனர்.

இதற்கு ஆர்.டி.ஓ, பதில் அளிக்கையில், மாநகராட்சி சார்பில் தினசரி சுத்தம் செய்யும் பணி நடைபெறும். எனவே அதுபற்றி கவலை வேண்டாம்.  மீன் வாங்க வருபவர்கள் சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூரின்றி வாங்கி செல்ல வேண்டும் என்றார்.

அப்டாவை அடைக்க சாத்தியம் இல்லை
அப்டா சந்தையில் இருந்தே மாவட்டம் முழுவதும் காய்கறிகளை சில்லரை விற்பனை வியாபாரிகள்  பெற்று செல்கின்றனர்.  கேரளாவிற்கும் காய்கனிகள் செல்கின்றன. இதனை மூடினால் குமரி  மாவட்ட மக்கள் காய்கறிகள் கிடைக்காமலும், தென்மாவட்ட விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால், தமிழ்நாட்டிலேயே அப்டா சந்தை மட்டும் செயல்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா தொற்று ஏற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிய கடைகள் மட்டும் மூடப்பட்டுள்ளன. இதர கடைகள் மற்றும் ஏல மண்டிகளில் கூட்டம் அலை மோதுகிறது. சமூக இடைவெளியை ஏல மண்டிகளில் பின்பற்றப்படுவதில்லை என சக வியாபாரிகளே அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே இங்கிருந்து தினசரி பகுதி வாரியாக சில்லரை விற்பனை கடைகளுக்கு தேவையான காய்கறிகள் அனுப்பி வைத்து, அப்படாவிற்கு வரும் சில்லரை விற்பனையாளர்களை கட்டுப்படுத்தப்படுமா என ஆர்.டி.ஒ மயிலிடம் கேட்டபோது, அப்டாவை மூடினால் கடும் காய்கனி தட்டுப்பாடு ஏற்படும். எனவே அதனை மூடும் சாத்தியம் இல்லை. அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம். ஊர் ஊராக மொத்த வியாபாரிகள் மூலம் அனுப்பி வைப்பது உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகள் குறித்து படிப்படியாக ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

வடசேரி தற்காலிக சந்தை திறப்பு எப்போது?
வடசேரி தற்காலிக பஸ் நிலைய சந்தை எப்போது திறக்கப்படும்? அல்லது மாற்றிடம் வியாபாரிகளுக்கு வழங்கப்படுமா என மாநகராட்சி ஆணையர் ஆஷாவிடம் கேட்டபோது, தற்போது வடசேரி தற்காலிக சந்தையில் பெரும்பாலான வியாபாரிகள், பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றிடம் வழங்கினாலும், அவர்கள்தான் வந்து மீண்டும் வியாபாரம் செய்ய வேண்டும். எனவே 14 நாட்கள் தனிமைக் காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் வடசேரி பஸ் நிலைய சந்தை திறக்கப்படும் என்றார்.

Tags : Ayurveda College ,backyard area , College of Ayurveda, Ganesapuram Fish Market
× RELATED குமரியில் ஒரு வாரத்தில் 465 பேர்...