×

ராமேஸ்வரம் கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா துவக்கம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ஆடித்திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கொரோனா ஊரடங்கினால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், ஆடி திருவிழாவின் அனைத்து உற்சவ நிகழ்வுகளும் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் என கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. நேற்று ஆடித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை, தொடர்ந்து காலபூஜைகளும் நடைபெற்றது.

காலை 10.30 மணிக்கு மேல் பர்வதவர்த்தினி அம்பாள், சர்வ அலங்காரத்தில் அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து தங்க கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு 11.30 மணியளவில் கோயில் குருக்களால் அம்பாள் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. திருக்கல்யாணம் வரும் 26ம் தேதி நடைபெறும். திருவிழா துவங்கியதை தொடர்ந்து நேற்று இரவு 8 மணிக்கு மேல் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அம்பாள் உலா வந்தார். கோயில் இணை கமிஷனர் செல்லமுத்து(பொ), உதவி கமிஷனர் ஜெயா, தக்கார் குமரன்சேதுபதி உட்பட உள்ளூர் பிரமுகர்கள், கோயில் பணியாளர்கள் குறிப்பிட்ட அளவில் பங்கேற்றனர்.

பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக, கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தெர்மல் சோதனை நடத்தப்பட்டது. பக்தர்கள் ஆடித்திருவிழா நிகழ்ச்சிகளை காணும் வகையில், யூடியூப்பில் வெளியிட கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கோயிலுக்குள் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுகள் அனைத்தையும், சிலர் மொபைலில் பதிவு செய்துள்ளனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் தமிழகம் முழுவதும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags : festival ,Rameswaram temple , Rameswaram Temple, Adithirukkalyana Festival
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...