×

லால்குடி அடுத்த தாளக்குடியில் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம்

லால்குடி: லால்குடி அருகே தாளக்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையிலேயே வழிந்தோடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். லால்குடி அடுத்த தாளக்குடி ஊராட்சி மருதமுத்து நகர் கீழவீதியில் 80 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முறையாக கழிவுநீர் (செப்டிக் டேங்க்) வசதி முறையாக செய்ததால் கழிவுநீர் சாலையிலேயே வழிந்தோடி, அப்பகுதியில் உள்ள உத்தமர் கோயிலுக்கு சொந்தமான குளத்தில் கலக்கிறது. கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மிகுந்த துர்நாற்றத்துடன் சாலையில் கழிவுநீர் ஓடுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

கழிவுநீர் குளத்தில் சென்று கலப்பதால் பல்வேறு நோய் தொற்று உருவாகும் இடமாக உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து போர்வெல்களிலும் குடிநீர் சுகாதாரமின்றி உள்ளது. மேலும் உத்தமர் கோயில் குளத்தில் அருகே ஊராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் தண்ணீர் அப்பகுதி பொதுமக்களின் குடிநீருக்கு ஜீவநாடியாக உள்ளது. தற்போது இதில் துர்நாற்றத்துடன் குடிநீர் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தால் தாளக்குடி ஊராட்சியில் சார்பில் அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் மட்டும் தெளிவித்து விட்டு சென்று விடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அவலநிலை குறித்து அப்பகுதி பொதுமக்கள் திருச்சி கலெக்டர், சுகாதாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், முதலமைச்சர் தனிப்பிரிவு, தாளக்குடி ஊராட்சி, லால்குடி யூனியன் ஆகியவைக்கு புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என வேதனையில் உள்ளனர். அதேப்போல் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரிடம் இது தொடர்பாக தெரிவித்தாலும், அவரும் இந்த பிரச்னையை கண்டு கொள்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் செலுத்தி, மக்கள் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு முறையான கழிவுநீர் வசதி இல்லாததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்.

Tags : apartment building sewage road tragedy ,Thalakudi ,Lalgudi , Lalgudi, Thalakudi, Apartments, Sewerage
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை