×

தமிழக-ஆந்திர எல்லையில் பணம் சிக்கியதில் திடீர் திருப்பம்: சென்னையில் நகை வாங்க அனுப்பியதாக தங்க வியாபாரி ஒப்புதல்

எளாவூர்: தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் சிக்கியது ரூ.5 கோடியே 22 லட்சம் என்றும், நகை வியாபாரி ஒருவக்கு சொந்தமானது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அரும்பாக்கம் அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக பதிவெண் கொண்ட காரில் பண்டல் பண்டலாக ஒரு கோடி ரூபாய் இருந்தது. மேலும், அந்தப்பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்து, காரில் இருந்த 3 பேரையும் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநில மின்துறை அமைச்சர் ஸ்ரீனிவாச ரெட்டிக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது.

ஆனால், அந்த கார் தனக்கு சொந்தமானது இல்லை என்று அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஓங்கோலில் உள்ள தங்க வியாபாரி பாலு என்பவருக்கு இந்த பணம் சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் நகை வாங்க பணத்தை கொடுத்து அனுப்பியதாக வியாபாரி பாலு ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சோதனை சாவடியில் சிக்கிய பணம் ஒரு கோடி ருபாய் இல்லை என்றும், ரூ.5 கோடியே 22 லட்சம் எனவும் விசாணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டது கருப்பு பணமா என்ற கோணத்தில் சுங்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags : border ,trader ,turnaround ,Chennai ,Andhra ,Tamil Nadu ,jewelery , Tamil Nadu-Andhra Pradesh border, money, car, Chennai, gold trader
× RELATED கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர்...