×

கோர முகத்தை காட்டும் கொரோனாவிற்கு 2-வது தடுப்பூசி: மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனையை தொடங்கியது இந்திய நிறுவனம்...!!!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றும் தணியாமல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த வாரம் தொடக்கம் முதல் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது. இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முதல் முறையாக 32,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. உலக முழுவதும் கோர முகத்தை காட்டி வரும் கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து பாரத் பயோடெக் நிறுவனமும், ஜைடாஸ் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனமும் கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. இவ்விரு தடுப்பூசிகளுக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆய்வக சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ள இரு மருந்துகளும் அடுத்ததாக மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட உள்ளது. இதற்கான இரண்டு கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜைடாஸ் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனை தொடங்கி உள்ளது. தனது தடுப்பூசியை 1000 பேருக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை தொடங்கி உள்ளதாக ஜைடாஸ் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இரு கட்ட மருத்துவ பரிசோதனையின்போது, தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை, சகிப்புத்தன்மை, நோய் எதிர்ப்புத்திறன் ஆகியவை சோதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. மருத்துவமனயைின் தகவலின்படி, தடுப்பூசியின் முதல் கட்ட பாதுகாப்பு சோதனை 84 நாட்களில் முடியும் என்றும் இரண்டாவது கட்ட சோதனையின்போது, பாதுகாப்பு, செயல்திறன் சோதிக்கப்படும். இது அடுத்த 84 நாட்களில் நிறைவு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜைடாஸ் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனம் அறிக்கை:
 
கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஜைடாஸ் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் எலி, கினியா பன்றிகள், முயல்கள் போன்ற விலங்கு இனங்களில் இந்த தடுப்பூசி சோதித்து பார்க்கப்பட்டது. அதில் இந்த தடுப்பூசியால் உருவான நோய் எதிர்ப்புச்சக்தியானது, கொரோனா வைரசை வீழ்த்தும் வலிமையை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தடுப்பூசியின் பாதுகாப்புத்திறன் வெளிப்பட்டள்ளது. தடுப்பூசியின் நச்சு இயல் ஆய்வுகளில் எந்தவொரு பாதுகாப்பு கவலையும் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : company ,Indian ,Zidas Cadillac Healthcare , Zidas Cadillac Healthcare launches 2nd vaccine against corona:
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ்...