×

எதிர்ப்புகளுக்கு பணிந்தார் அதிபர் டிரம்ப் வெளிநாட்டு மாணவர்களின் விசா கட்டுப்பாடு திடீர் ரத்து: ஒரே வாரத்தில் திருப்பம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில், ஆன்லைன் வழியாக பாடம் நடத்தும் கல்லூரிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க அரசு கடந்த 6ம் தேதி உத்தரவிட்டது. இது, அமெரிக்காவில் படிக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. அதிபர் டிரம்ப்பின் இந்த அதிபரின் முடிவுக்கு 17 மாகாண அரசுகள், ஹார்வார்ட் பல்கலைகழகம், மசாசூசெட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்கள் இணைந்து மசாசூசெட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி அலிசன் பராக்ஸ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டிரம்ப் நிர்வாகம் கடந்த 6ம் தேதி உத்தரவை திரும்பப் பெறுவதாக ஒப்புக் கொண்டிருப்பதாக நீதிபதி அறிவித்தார். வரும் நவம்பரில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த விவகாரம் டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் சட்ட நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், ஒரே வாரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. இது, வெளிநாட்டு மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், பாமர மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அமெரிக்க எம்பி பிராட் ஸ்னீடர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு, அமெரிக்காவில் தங்கி படிக்கும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

* அடுத்த ஆப்பு ரெடி
சிறு வயதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு, வளர்ந்த பின்னர் பணி செய்வதற்கான அனுமதி அமெரிக்காவில் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ், 7 லட்சம் பேர் அங்கு தங்கியுள்ளனர். இதில் அதிகளவில் இருப்பவர்கள் இந்தியர்களும், தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களும்தான். இந்த சலுகை உட்பட குடியேற்றத்துறையில் மிகக்கடுமையான உத்தரவுகளுடன் சட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். தகுதி உடையவருக்கு மட்டுமே விசா என்பதை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டத்தில் விரைவில் தான் கையெழுத்திடப் போவதாகவும் அவர் பேட்டி தந்துள்ளார். குடியேற்ற விவகாரத்தை கடுமையாக்குவது டிரம்ப்பின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல சீனாவை குறி வைத்து, ஹாங்காங் தன்னாட்சி சட்டம் மற்றும் வர்த்தகத்தில் ஹாங்காங்குக்கு முன்னுரிமை கொடுக்கும் சிறப்பு சலுகையை நீக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டு நிறைவேற்றி உள்ளார்.

1.95 லட்சம் மாணவர்கள் முன்பதிவு
* கடந்த 2018-19ம் கல்வியாண்டில் அமெரிக்காவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.
* இவர்களில் சீன மாணவர்கள் முதலிடத்திலும், 2வது இடத்தில் இந்திய மாணவர்களும் இருக்கின்றனர்.
* கடந்த ஜனவரி வரையிலான காலகட்டத்தில், 1 லட்சத்து 94 ஆயிரத்து 556 இந்திய மாணவர்கள், அமெரிக்கா சென்று படிக்க பெயரை பதிவு செய்துள்ளனர்.

Tags : Trump ,cancellation ,protests , Opposition, submissive, President Trump, foreign student, visa restriction, revocation
× RELATED பாலியல் தொல்லை செய்த அமெரிக்க அதிபர்...