×

கொரோனா பாதிப்பை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து: முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை: கொரோனா நோயின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவிட்-19 நோய் தொற்று, முதியவர்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த நோய், இதயம் சார்ந்த நோய்கள் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில், தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் கடந்த 50 ஆண்டுகளாக பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நோய்வுற்ற விகிதமும் உயிரிழப்பு விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்கூறிய காரணங்களின் அடிப்படையிலும், இன்றளவில் கோவிட்-19 நோய் தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையிலும் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தினை செலுத்தி அதன் செயல்திறனை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தமிழ்நாடு அரசின் அனுமதியினை கோரியிருந்தது.

இதனை ஏற்று உடனடியாக உரிய அனுமதியை வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த சோதனை முயற்சியை ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெகு விரைவில் தொடங்கவுள்ளது.
பிசிஜி தடுப்பு மருந்தினை முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் கோவிட்-19 நோயின் தீவிர தன்மையை குறைக்கவும் மருத்துவமனையில் அனுமதியை தவிர்க்கவும் உயிரிழப்பை குறைக்கவும் பேருதவியாக அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : elderly ,Edappadi ,PCG , Corona, reduce, test base, geriatric, PCG, vaccine, CM Edappadi
× RELATED ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு