×

பலவீனமானவர்களே உஷாரா இருங்க... இரக்கமற்ற கொரோனா இதயத்தையும் தாக்கும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

லண்டன்: கொரோனா வைரசானது நமது இதயத்தையும் சேதப்படுத்துக்கும் என இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் மனித நுரையீரலை மட்டுமே தாக்கும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர், சிறுநீரகத்தை பாதிப்பதாக கூறப்பட்டது. பிறகு, மூளை, இரைப்பை, நரம்பு மண்டலம் என அனைத்தையும் தாக்குவதாக ஆய்வுகளில் தெரிய வந்தது. இப்போது, இது இதயத்தையும் கடுமையாக தாக்குகிறது என்பது மருத்துவ ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றி இங்கிலாந்தை சேர்ந்த ஹார்ட் பவுண்டேஷன் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கெரோனா தாக்குதலில் இதயமும் பாதிக்கப்படுகிறதா என்பதை அறிய, உலகம் முழுவதும் 69 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் இதயங்கள் ஸ்கேன் செய்யப்பட்டன. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் இதயங்கள் அசாதாரண மாற்றங்களை கொண்டிருந்தன. ஸ்கேன் செய்யப்பட்ட 8 நோயாளிகளில் ஒருவரின் இதயத்தில் கடுமையான செயலிழப்பு அறிகுறிகள் காணப்பட்டது. இதற்கு காரணமாக கொரோனா வைரசை தவிர வேறு எந்த நோய் காரணங்களையும் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவர் உயிர் இழக்கின்றனர். எனினும், உயிர் பிழைத்தவர்கள் கூட கொரோனா ஏற்படுத்திய பாதிப்புக்களில் இருந்து மீளமுடியாமல் நீண்ட கால நோய் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் காணப்படுகின்றது. கொரோனா வைரசானது குறிப்பிட்ட உறுப்பை மட்டுமின்றி உடலின் முக்கிய உறுப்புக்களில் பரவலாக சேதத்தை ஏற்படுத்துகிறது. சில நோயாளிகளை உடல்நல பிரச்னைகளுடன் இந்த கொரோனா விட்டு செல்கிறது. சில மாதங்கள் அல்லது தொற்று நோயில் இருந்து குணமடைந்து வந்த பின்னரும் இந்த உடல்நல பிரச்னைகளால் அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்.

இதில், நீண்ட கால உடல்நலப் பிரச்னைகளில் இருமல், மூச்சுச் திணறல் மற்றும் நுரையீரலின் செயல்பாடு குறைதல் ஆகியவை அடங்கும். இந்த கொரோனா மனித சிறுநீரகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு செல்வதற்கான ஆதாரங்களும் உள்ளன. கொரோனா வைரசை ‘மல்டி சிஸ்டம் நோய்’ என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதயம் உட்பட உடலின் பல உறுப்புக்களிலும் ஆழமான விளைவுகளை இந்த வைரஸ் ஏற்படுத்தி செல்கிறது. எனவே, இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களை காட்டிலும் கொரோனா வைரசின் காரணமாக அதிகமாக இறக்கும் ஆபத்தை கொண்டுள்ளதாக ஆதாரங்கள்  காட்டுகின்றன. ஏற்கனவே, இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* வரும் முன் காப்பதே சிறப்பு
‘வைரஸ் வந்த பின் வருந்தி அவதியுறுவதை விட ‘வருமுன் காப்போம்’ என்பதே கொரோனாவிற்கான சிறந்த மருந்தாகும். இதனை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி முன்னெச்சரிக்கையோடு செயல்படவேண்டும்,’ என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

55 % பேருக்கு இதய பாதிப்பு
* உலகம் முழுவதிலும் 69 நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் 1,216 கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு இதய பரிசோதனை செய்யப்பட்டது.
* இவர்களில் 55 சதவீதம் பேருக்கு இதயம் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.
* இவர்கள் கொரோனாவிற்கு முன் ஆரோக்கியமான இதயத்தை கொண்டிருந்துள்ளனர்.

Tags : researchers , Weak, stay alert, ruthless corona, heart attack, researchers warn
× RELATED லண்டனில் ஆழ்கடலில்...