சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு: மாணவிகள் 93.31% தேர்ச்சி

சென்னை: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று மதியம் வெளியானது. மொத்த தேர்ச்சிவீதம் 91.46 சதவீதம். இந்த தேர்வில்  மாணவியர் 93.31 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மத்திய பள்ளிக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 20ம்தேதி முடிந்தன. கொரோனா தொற்று காரணமாக சில தேர்வுகள் மார்ச் 19ம் தேதிமுதல் 31ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மேற்கண்ட தேர்வுகள் நடத்த முடியாமல் போனது.

இதையடுத்து, அகமதிப்பீட்டு முறையில் தேர்ச்சியை அறிவிக்க  கடந்த 26.6.20ல் உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது. இதன்படி, ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீட்டின் கீழ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, நேற்று மதியம் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 20,387 பள்ளிகளை சேர்ந்த18 லட்சத்து 85,885 மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்து இருந்தனர். இவர்களுக்காக நாடு முழுவதும் 5.377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும், இந்த 10ம் வகுப்பு தேர்வில் 18 லட்சத்து 73 ஆயிரத்து 15 பேர் எழுதினர். அவர்களில் 17 லட்சத்து 13,121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த தேர்ச்சி 91.46 சதவீதம். இது கடந்த 2019ம் ஆண்டைவிட 0.36 சதவீதம் அதிகரித்துள்ளது. சிபிஎஸ்இ வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ள 16 மண்டலங்களில் திருவனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்த சிபிஎஸ்இபள்ளிகளை சேர்ந்தவர்கள் அனைத்து பாடங்களிலும் பெற்றுள்ள தேர்ச்சிவீதம் 99.28சதவீதம். நாட்டிலேயே இந்த மண்டலம் முதலாம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 98.95 சதவீதம் பெற்று நாட்டில் 2ம் இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு மண்டலம் 98.23 சதவீதம் பெற்று நாட்டில் 3வது இடத்தை பிடித்துள்ளது.  வெளிநாட்டை சேர்ந்த மாணவர்களில் 23 ஆயிரத்து 841 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 23 ,716 பேர் தேர்வு எழுதி, 23,400 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களின் மொத்த தேர்ச்சி வீதம் 98.67%. மேற்கண்ட 10ம் வகுப்பு தேர்வில் மாணவியர் 93.31 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். மாணவர்கள் 90.14 சதவீதம் பெற்றுள்ளனர். மாற்று பாலினத்தவர்கள் 78.95 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ பள்ளிகளை பொருத்தவரையில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் 80.91 சதவீதம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 77.82 சதவீதம், தனியார் பள்ளிகள் 92.81 சதவீதம், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 99.23 சதவீதம், ஜவகர்லால் நேரு வித்யாலயா பள்ளிகள் 98.66 சதவீதம், தேர்ச்சியை பெற்றுள்ளன. இந்த தேர்வில் நாடு முழுவதும் 1 லட்சத்து 84 ஆயிரத்து 358  மாணவ மாணவியர் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் (9.84சதவீதம்) பெற்றுள்ளனர். 41 ஆயிரத்து 804 பேர் 95 சதவீதத்துக்கும் மேல்மதிப்பெண் (2.23சதவீதம்) சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த மாணவர்களில் 1 லட்சத்து 50 பேர் அனைத்து பாடங்களையும் மீண்டும் எழுத வேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது மொத்ததில் 8.02சதவீதம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் 99.61 சதவீதம் பேர் தேர்ச்சி

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 16 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் சென்னை மண்டலத்தில் சென்னை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, அந்தமான் நிகோபார் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். இவற்றில் சென்னையில் 1581 பள்ளிகள் மூலம் சிபிஎஸ்இ 10ம் தேர்வு எழுத 1 லட்சத்து 20 ஆயிரத்து 143 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர். இவர்களில்  66712 பேர் மாணவர்கள், 53431 பேர் மாணவியர். இவர்களுக்காக 448 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வில் 1 லட்சத்து 19,937 பேர் பங்கேற்றனர். 1 லட்சத்து 18 ஆயிரத்து 672 பேர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்த தேர்ச்சி வீதம் 98.95%. அவர்களில் மாணவர்கள் 98.75%தேர்ச்சியும், மாணவியர் 99.19% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். சென்னையில் இயங்கும் 1581 சிபிஎஸ்இ பள்ளிகளை பொறுத்தவரையில் அரசுப் பள்ளிகள் அனைத்து பாடங்களிலும் 84.57 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. தனியார் பள்ளிகள் 23.53 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. சென்னையில் தேர்வு எழுதியோரில் மொத்தம் தேர்வு எழுதியதில் 1215 பேர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.  மாநில அளவில் பார்க்கும் போது தமிழ்நாட்டில் மொத்தம் 62,312 பேர் தேர்வு எழுத பதிவு செய்து, 62260 பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 62,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 99.61 சதவீதமாக உள்ளது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Related Stories: