×

சென்னையில் தெருவுக்கு தெரு போலி மது, மாது, சூது தொழில் கனஜோர்: போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

சென்னை: சென்னையில் தெருவுக்கு தெரு போலி மது விற்பனை, மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில், சூதாட்ட விடுதிகள் என பல்வேறு குற்றச்செயல்கள் சமீப நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் புதிதாக பதவி ஏற்ற போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா அல்லது தேர்தல் நேரம் என்பதால் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்களா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள், கொலைகள் ஓரளவு குறைந்தாலும், மக்களை கெடுக்கும், கலாச்சாரத்தை சீரழிக்கும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதுவும் போலீஸ் உயர் அதிகாரிகளின் ஆசியுடன் இந்த குற்றங்கள் நடந்து வருகின்றன.

சென்னையில் தற்போது, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகம் என்பதால், சென்னை போலீஸ் எல்லை மற்றும் பக்கத்து மாவட்டங்களில் சில பகுதிகளில் மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டாலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ஆந்திராவில் இருந்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மதுவிலக்கு போலீசாருக்கும், சென்னை மாநகர போலீசாருக்கும் உள்ளது. ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அதிமுகவில் சில கீழ்மட்ட நிர்வாகிகள், உள்ளூர் போலீசார் துணையுடன் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். திருவள்ளூரில் இருந்து போலி மதுபானங்களும், ஆந்திராவில் இருந்து பாக்கெட் சாராயமும் அதிக அளவில் சென்னைக்குள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக குடிசைப் பகுதிகளில் இதுபோன்ற விற்பனை அதிகரித்து வருகின்றன. அதேபோல, கஞ்சா, போதைப் பொருள் விற்பனையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகளில் விற்பனை செய்வதற்காகவே சில கும்பல்கள் இருந்தன. இவர்கள் தற்போது பள்ளி, கல்லூரிகள் இல்லாததால் குடிசைப் பகுதிகளில் விற்பனையை தீவிரப்படுத்தியுள்ளனர். துணை கமிஷனர் வரை அவர்கள் கவனித்துக் கொண்டு இந்த விற்பனையை அதிகரித்த வண்ணம் உள்ளனர். இதனால் இளைஞர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த சில நாட்களாக சென்னையில் ஆளும்கட்சியினரின் துணையுடன் மசாஜ் பார்லர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தெருவுக்குத் தெரு இந்த பார்லர்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு முன்னர் வேகமாக தொடங்கப்பட்டது. அங்கு ஆண்களுக்கு பெண்களை வைத்து மசாஜ் செய்யப்பட்டு வந்தன. பின்னர் விரும்பும் ஆண்களுடன் பாலியல் தொழிலும் நடத்தப்பட்டு வந்தன. சில இடங்களில் பாலியல் தொழிலுக்காகவே இந்த பார்லர்கள் நடத்தப்பட்டு வந்தன. இதற்காக விபசார தடுப்புப் பிரிவு போலீசுக்கும், சட்டம் -ஒழுங்கு போலீசாருக்கும் ஒவ்வொரு மாதமும் பணத்தை கட்டி விட்டு தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்தப் பணம் மேல் மட்டத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் வரை சென்றது. சில நேரங்களில் சட்டம் -ஒழுங்கு பிரிவில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய பெண்களை அடையாளம் காட்டி, சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று மசாஜ் செய்து வந்தனர். பெண்களை சப்ளை செய்வதற்காகவே ஏராளமான புரோக்கர்களும் சென்னையில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு மசாஜ் சென்டரிலும் குறைந்தது 5 முதல் 10 பெண்கள் வரை பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சென்டர்களுக்கு இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் என்று பலதரப்பினரும் வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. அதில் சில குடும்ப பெண்களை ஆசைவார்த்தைகளைக் கூறி, அழகு நிலையங்களில் வேலை என்று அழைத்துச் சென்று பாலியலில் தள்ளிவிடுவதாகவும், அதன்பின்னர் அவர்கள் அதில் இருந்து வெளியில் வர முடியாமல் குடும்ப கஷ்டத்தை மனதில் வைத்து தொடர்ந்து மசாஜ் பார்லர்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு இதுபோன்ற தவறான வழிகளில் ஈடுபடுவதாகவும், இதனால் மாணவர்களின் வாழ்க்கை முற்றிலும் சீரழிந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொரோனா காலங்களில் இந்த மசாஜ் சென்டர்கள் மூடப்பட்டிருந்தன.

தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அனைத்து மசாஜ் சென்டர்களும் திறக்கப்பட்டுள்ளது. இந்த சென்டர்களில் குறிப்பிட்ட சில கும்பல்கள் மட்டுமே நடத்துவதாகவும், ஒவ்வொரு ஏரியாவிலும் ஆளும் கட்சியின் விஐபிக்கள் துணையுடன் நடத்துவதாகவும், அந்த விஐபிக்கள் உயர் அதிகாரிகளை தனியாக கவனித்து விடுவதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மசாஜ் சென்டர்கள் நடத்தப்படுவதாகவும், இந்த கொரோனா காலத்திலும் இவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல நகரின் பல பகுதிகளில் சூதாட்ட விடுதிகள் அதிக அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தொழிலாளர்கள் மிகுந்த பகுதிகளில் இயங்கி வருகின்றன. இந்த சூதாட்ட விடுதிகளில் இருந்து மொத்தமாக வசூலித்து இன்ஸ்பெக்டர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை லட்சம் லட்சமாக லஞ்சமாக கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகளின் ஆசியுடன் இவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை இதுபோன்ற சூதாட்ட விடுதிகளில் தொலைத்து விடுவதாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். போலீஸ் உயர் அதிகாரிகள் பணத்துக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்க குற்றவாளிகளுக்கு துணை போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபோன்ற சமூக விரோத செயல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 2 கூடுதல் கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் என்று பலரும் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் புதிய அதிகாரிகள் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கொரோனா காலத்திலும், கிளுகிளுப்பு கேஸ்களை வசீகரித்து இழுத்து பிசினஸ் நடத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் கொரோனா பரவும் ஆபத்தும் அதிகரித்துள்ளது. அனைத்து மசாஜ் சென்டர்களும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த சென்டர்களை குறிப்பிட்ட சில கும்பல்கள் மட்டுமே நடத்துவதாகவும், ஒவ்வொரு ஏரியாவிலும் ஆளும் கட்சியின் விஐபிக்கள் துணையுடன் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.


Tags : Street ,gambling industry ,Chennai Kanajor , Chennai, street to street, fake liquor, liquor, gambling industry, Kanajor, police
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...