×

மலேசிய மணல் யூனிட் ரூ.10,688 ஆக உயர்வு: பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள் அதிர்ச்சி

சென்னை: மலேசிய மணல் விலை ஒரு யூனிட் ₹10,688 ஆக உயர்ந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆற்றுமணல் தட்டுப்பாட்டால் கடந்த 2018 அக்டோபர் முதல் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மலேசிய மணல் ஒரு யூனிட் ரூ.10,350க்கு விற்பனை செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் மணல் விலை ஒரு யூனிட் ரூ.337 ஆக குறைந்து, ரூ.10,013க்கு விற்பனை செய்யப்பட்டன.

தற்போது கட்டுமான பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மணல் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது. குறிப்பாக, 30  ஆயிரம் லோடு வரை மணல் விற்பனையாகாமல் உள்ளது. இந்த மணல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு மாறாக மணல் விலை ஒரு யூனிட் ரூ.10,013 ஆக இருந்த நிலையில் ரூ.10,688 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், ‘மலேசியா மணல் ஆந்திரா மாநிலம் (கிருஷ்ணா பட்டிணம்) ரூ.1500க்கும், கர்நாடகா மாநிலத்தில் ஒரு டன் மணல் ₹1650க்கும் விற்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் டன் ரூ.2500 என விற்பது ஏன் என தெரியவில்லை. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மலேசியாவிற்கும் உள்ள தூர்த்தை விட தமிழகம் சில கிலோ மீட்டர்கள் குறைவாக உள்ளதால், போக்கவரத்து செலவும் குறைவாக ஆகிறது. ஆனால், இங்கு தான் மணல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது’ என்றார்.

Tags : Malaysian ,construction companies , Malaysian sand, unit Rs 10,688, rise, public, construction companies, shock
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...