×

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனை சாவடியில் ரூ.4 கோடி ஹவாலா பணம் பிடிபட்டது: தமிழக அமைச்சருக்கு கொண்டு செல்லப்பட்டதா?

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைசாவடியில் நடைபெற்ற வாகன சோதனையில், காரில் கடத்தி வந்த ரூ.4 கோடி ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர அமைச்சரிடம் இருந்து தமிழக அமைச்சருக்கு பணம் சென்றதாக கூறப்படுகிறது. இந்தப் பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைசாவடி உள்ளது. இவ்வழியாக நாள்தோறும் சென்னையில் இருந்த ஆந்திரா மற்றும் பல்வேறு வடமாநிலங்களுக்கும் ஏராளமான சரக்கு வாகனங்கள் செல்கின்றன. அதேபோல, ஆந்திராவில் இருந்து சென்னைக்கும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வருகின்றன.

அதேபோல் இம்மார்க்கத்தில் கஞ்சா, செம்மரம், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட பல்வேறு கடத்தல்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் இங்கு போலீசார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், எளாவூர் சோதனைசாவடி வழியாக நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். ஆனால் அதன் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், காருக்குள் முழுமையாக சோதனை செய்தனர். அப்போது காரின் பின்சீட்டில் 4 டிராவல் பைகளில் ரூ.4 கோடி வைத்திருந்தது தெரியவந்தது. அதற்கான ஆவணங்களும் டிரைவரிடம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் இருந்த ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியை சேர்ந்த நாகராஜ் (32), வசந்த் (36) மற்றும் டிரைவர் லட்சுமி நாராயணன் (38) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட பணத்தை சென்னை வருமானவரி துறை அதிகாரிகளிடம் ஆரம்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும், இந்த சொகுசு காரின் முன்பக்க கண்ணாடியில் ஆந்திர மாநில எம்எல்ஏ என பொறிக்கப்பட்டு இருந்தது. கார் கோவையைச் சேர்ந்த டி.ரவிச்சந்திரன் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் தமிழக அமைச்சர் ஒருவருக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்வதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் நகை வாங்குவதற்காக பணத்தை எடுத்து வந்ததாக கூறினர். இவ்வளவு பணத்தைக் கொண்டு எப்படி நகை வாங்க வந்தனர் என்பது தெரியவில்லை.
இதனால் பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சோதனை சாவடியில் ரூ.4 கோடி சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : minister ,check post ,Tamil Nadu ,Elavoor ,Gummidipoondi , Gummidipoondi, Elavoor check post, Rs 4 crore hawala money, Tamil Nadu Minister, was taken?
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...