குடும்ப வாரிசுகள் 90 பேர் புடைசூழ 107 வயது கொண்டாடிய தாத்தா: அறந்தாங்கியில் உற்சாகம்

அறந்தாங்கி: மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகளுடன் 107 வயது முதியவர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இதுபற்றிய விவரம் வருமாறு; புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பெருமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. இவருக்கு 107 வயது ஆகிறது. இவரது மனைவி செல்லம்மாள். தம்பதிக்கு காளிமுத்து, ரத்தினம், நாராயணசாமி மற்றும் கோவிந்தசாமி என்ற 4 மகன்கள். பத்மாவதி, சிவயோகம் மற்றும் பிரேமாவதி என்ற 3 மகள்கள். இதில் காளிமுத்து, பத்மாவதி ஆகியோர் இறந்துவிட்டனர். இவரது குழந்தைகளில் ரத்தினம் தவிர மற்றவர்கள் பணியின் நிமித்தமாக வெளியூர்களில் நிரந்தரமாக தங்கிவிட்டனர்.

நேற்று கருப்பையாவிற்கு 107வது பிறந்தநாள். இதையொட்டி அவரது குடும்ப உறவினர்கள் அனைவரும் வந்து,கேக் வெட்டி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். முதியவருக்கு கேக் ஊட்டி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதில் மகள்கள், பேரன்கள், பேத்திகள் மற்றும் கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள், எள்ளுப்பேரன், எள்ளுப்பேத்திகள் என 90க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வயதிலும் கருப்பையா, யாருடைய உதவியும் இல்லாமல் இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்தே செல்கிறார். தனக்கு தேவையான பொருட்களை தானே எடுத்துக் கொள்கிறார். காந்தியவாதியான அவர் தினமும் கதர் ஆடையையே அணிகிறார்.

Related Stories:

>