×

பரிசோதனைகள் மேற்கொள்ள வசதியாக பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் கர்ப்பிணிகள் அட்மிட் ஆக வேண்டும்: சுகாதார துணை இயக்குநர் அறிவுறுத்தல்

சிவகங்கை: சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சுகாதாரத்துறையின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தேவையான மருந்து மாத்திரைகளை கிராம சுகாதார செவிலியர் மற்றும் மருத்துவர் மூலம் பெற்று தகுந்த அறிவுரையின்படி உட்கொள்ள வேண்டும். அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சேர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக கிராம சுகாதார செவிலியர் அல்லது அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் நீண்ட நாள் நோய் மற்றும் வயது முதிர்வின் காரணமாக இறப்பு நேரிட்டால் மத சடங்குகள் செய்வதற்கு குறைந்த நபர்கள் பங்கெடுக்க வேண்டும். அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றோர் வெளியில் செல்வதை கூடிய வரையில் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்களில் யாருக்கேனும் லேசான சளி, காய்ச்சல், இருமல் தொற்று இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் உடனடியாக சென்று பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக 93464 67903, 94999 33860 என்ற செல் எண்களில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் உரிய விளக்கம் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : women ,delivery ,Deputy Director of Health , Pregnant women, admitted ,one week before ,tests, Deputy Director of Health
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...