குண்டாறு அணையில் திடீர் விரிசல் : தண்ணீர் கசிவால் விவசாயிகள் வேதனை

செங்கோட்டை: குண்டாறு அணையில் திடீர் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே அமைந்துள்ளது குண்டாறு அணை இந்த அணை 1983ம் ஆண்டு கட்டப்பட்டது. 36  அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் 12 குளங்கள் உட்பட சுமார் 2,122 ஏக்கர்  விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணை தென்காசி மாவட்டத்திலேயே மிக குறைந்த கொள்ளளவு கொண்டது என்பதால் பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் ஓரிரு வாரங்களில் நிரம்பிவிடும். அதேபோல கோடை காலங்களில் விரைவாக வறண்டு போய்விடும்.

 செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய பணிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்துவருவது குண்டாறு அணை ஆகும். இந்நிலையில்,  கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால்  குண்டாறு நீர்தேக்கமானது முழு கொள்ளளவை எட்டும் நிலைக்கு வந்தது. இதனால் தஞ்சாவூர்குளம், செங்கோட்டை பகுதிகுளங்கள், நல்லூர், பிரானூர், தென்கால்வாய், மெட்டு, மூன்றுவாய்க்கால், பிரானூர், கொட்டாகுளம் பகுதி விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குண்டாறு நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவு எட்டி வெளியேறும் தண்ணீர் வழிந்தோடி வரும் பகுதியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த விரிசல் காரணமாக தண்ணீர் பல இடங்களில் அதிக அளவில் வெளியேறிவருவதால் அணையின் முழு கொள்ளளவை எட்டுவதிலும் அணை அமைக்கப்பட்ட நோக்கமும் பாழாகி வருகிறது. மேலும் இந்த விரிசலால் தண்ணீர் அழுத்தம் மேலும் அதிகரித்தால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் ஆண்டுக்கு ஒரு முறை பழுது பார்க்கப்படுவதாக கூறப்படுவதுடன் இந்த அடைப்புகளை சரி செய்யவில்லை. கடந்த ஆண்டுகளில் இதே நிலையால் விவசாயிகள் முறையிட்டதால் அணை பழுது பார்க்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் தண்ணீர் தற்போது நிறைந்து வரும் நிலையில் அதே இடங்களில் தற்போது விரிசல்களும் கசிவும் அதிகரித்து வருகிறது.

அதேபோல் அந்த அணையில் இருந்து வெளியேறும் பணிமுண்டம் கால்வாய் என்று அழைக்கப்படும் கால்வாய் தான் அணையின் முதல் கால்வாயாகும். இந்த கால்வாய் மூலம் சுமார் 80 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் அதற்கு அடுத்துள்ள குளங்களுக்கு நீர் செல்வதும் இந்த கால்வாய் வழியாக தான். இந்த கால்வாய் வரும் வழி முழுவதிலும் கால்வாய் ஷட்டர் அருகில் இருந்தே பல இடங்களில் நீர் கசிவு உள்ளதால் கால்வாயில் சுமார் 20 அடி தூரம் மட்டுமே வரும் தண்ணீர், அதன் பின்னர் வறண்ட நிலையிலேயே உள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>