×

விதிமுறை மீறி முறைகேடாக கொள்முதல் வியாபாரிகள் நெல் ஏற்றி வந்த டிராக்டரை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

மன்னார்குடி: அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் இரவில் விதிமுறை மீறி முறைகேடாக கொள்முதல் நடைபெற்றதாக கூறி நெல் மூட்டைகளை ஏற்றி வந்த வியாபாரிகளின் டிராக்டரை சிறைபிடித்து விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் வடுவூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான வடபாதி, தென்பாதி, மேல்பாதி, அக்ரகாரம், புதுக்கோட்டை, உத்தங்குடி, சாத்தனூர், கொண்டையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோடை அறுவடை முடிந்த நிலையில் தற்போது குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், வடுவூர் அடிச்சேரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில வாரங்களாக வியாபாரிகள் மூலம் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்மூட்டைகள் இரவு நேரங்களில் விதிமுறை மீறி கொள்முதல் செய்யப்படுவதாக வடுவூர் பகுதி விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வடுவூர் ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் 50 விவசாயிகள் நேற்றுமுன்தினம் இரவு அடிச்சேரி நேரடி கொள்முதல் நிலையத்திற்கு சென்றனர். அப்போது அங்கு வெளியூரில் இருந்து வியாபாரிகளால் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளுடன் டிராக்டரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, வடுவூர் காவல் நிலையத்திற்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல் தட்டிக் கழித்து விட்டு, வியாபாரிகளிடம் முறைகேடாக சாக்குகளை அனுப்பி கொள்முதல் செய்கிறார்கள். முறைகேடு கொள்முதலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அனைத்து விவசாயிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.

இதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மன்னார்குடி அலகு துணைமேலாளர் காண்டீபன் (கொள்முதல் மற்றும் இயக்கம்) மற்றும் அதிகாரிகள், வடுவூர் போலீசார் ஆகியோர் நேற்று காலை 10மணியளவில் அடிச்சேரி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், தவறு செய்த பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். அந்த நிலையத்தில் வியாபாரிகளிடமிருந்து இருந்து கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து நெல்மூட்டைகளையும் உடனடியாக அப்புறப்படுத்தி விடுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொண்டு கலைந்து சென்றனர்.

Tags : traders , Farmers protest, illegally capturing ,ractor loaded ,paddy by traders
× RELATED திருவேங்கடம் அருகே புகையிலை பதுக்கிய 2 வியாபாரிகள் கைது