×

பாலமேடு பகுதியில் ஆடிபட்ட தானிய விதைப்பு தீவிரம்

அலங்காநல்லூர்: பாலமேடு பகுதியில் ஆடிபட்ட பயறு தானிய விதைப்பு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், பாலமேடு சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவ மழையை தொடர்ந்து ஆடிப்பட்ட பயிர் தானிய விதைப்பு தொடங்கியுள்ளது. வருடம் தோறும் ஆடி மாதத்தில் பல்வேறு வகையான பயறு தானியங்களை விதைப்பது வழக்கம். ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு அன்று உழவுப் பணிகள் தொடங்கி பலவகை தானியங்களை விவசாயிகள் விதைப்பு செய்வது பாரம்பரிய வழக்கமாக இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே பெய்த காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாமல் விவசாயம் பாதிப்பு காரணமாக வருவாய் இழந்த விவசாயிகள் தீவிரமாக உழவுப்பணி செய்து வருகின்றனர். அதில் நிலக்கடலை, மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து, துவரை, மொச்சை உள்ளிட்ட பல்வேறு பயிர் தானியங்களை விதைப்பு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பாலமேட்டை சேர்ந்த விவசாயி அழகு கூறியதாவது, இந்தப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய பருவமழை இல்லாமல் ஆடிப்பட்டத்தில் மட்டுமல்லாது ஆண்டுதோறும் செய்யக்கூடிய எந்தவகை தானிய விவசாயமும் செய்ய முடியாமல் பரிதவித்து வந்தோம். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் பெய்ய வேண்டிய மழை முன்கூட்டியே நல்ல முறையில் பெய்த காரணத்தினால் ஆடி 18ம் பெருக்கு அன்று விதைப்பு செய்ய வேண்டிய நாட்களுக்கு முன்னரே இந்த ஆண்டு விதைப்பு பணியை துவங்கி விட்டோம். இனி வரும் நாட்களில் இதேபோன்று வருணபகவான் கருணை காட்டினால் விதைப்பு செய்த தானியங்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

Tags : area ,Palamedu ,sowing , Intensity , sowing , grain , Palamedu area
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...