×

திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கு தமிழகத்தில் இ-பாஸ் பெற்று சொப்னா தப்பியது அம்பலம்: என்ஐஏ தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் தமிழகத்தில் இ-பாஸ் எடுத்து தப்பிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சந்தீப் நாயரின் வீட்டில் சுங்க இலாகா, என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. திருவனந்தபுரத்தில் தங்கம் பிடிபட்ட 5ம் தேதியே சொப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயார் திருவனந்தபுரத்தை விட்டு தப்பியுள்ளனர்.

திருவனந்தபுரம் மாவட்ட எல்லையான வர்கலாவில் ஒரு ஓட்டலில் அவர்கள் அறை எடுத்து 2 நாட்கள் தங்கியுள்ளனர். அங்கிருந்து அவர்கள் தமிழ்நாட்டில் இ-பாஸ் பெற்றுள்ளனர். அதில் அவர்களது கார் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா செல்ல அவர்கள் பாஸ் பெற்றுள்ளனர். ஆனால், இந்த பாஸ் சொப்னா சுரேஷ் பெயரில் எடுக்கப்படவில்லை. இவர்களுக்கு தமிழக பாஸ் எப்படி கிடைத்தது? தமிழகத்தை சேர்ந்த யாராவது உதவினார்களா? என்பது குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த பாஸ் பெற்றபின் இவர்கள் கொச்சி சென்று வக்கீலை சந்தித்த பிறகே பெங்களூரு சென்றுள்ளனர்.

சிவசங்கருக்கு பிடி இறுகுகிறது: தங்கம் கடத்தலில் சொப்னா சுரேஷ் கும்பலுடன் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு தொடர்பு குறித்த பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள சிவசங்கரின் வீட்டிற்கு சென்ற சுங்க இலாகா அதிகாரிகள், விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் கொடுத்தனர். அடுத்த சில மணி நேரத்தில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது. இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அமைச்சர் ஜலீலுடன் தொடர்பா?: சொப்னா சுரேஷ்  ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், கேரள உயர் கல்வித்றை அமைச்சர் கெ.டி.ஜலீல் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பேசியது தெரிய வந்தது. அமைச்சர் ஜலீலுடன் கடந்த மாதம் 9 முறை பேசியுள்ளார். பலமுறை ஜலீல்தான் சொப்னாவை அழைத்துள்ளார்.  இது கேரள அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thiruvananthapuram ,Sopna ,investigation ,NIA ,Tamil Nadu , Thiruvananthapuram, Gold smuggling case, Tamil Nadu e-pass, Sopna, NIA serious investigation
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!