×

கொரோனாவால் பாதிப்புக்குள்ளான 61 ஆயிரம் பேருக்கு இயற்கை மருத்துவ சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்கள் தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டால் நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து சுவாசப் பாதைகள் சீராகும். மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எளிய முறையிலான சில ஆசனங்களும் வழிவகுக்கின்றன. இதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இதை தவிர, மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும், நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமணச் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இப்பணிகளில் 200க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்ட மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்கள் என 86 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இதுவரை 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். தேவையின் அடிப்படையில் இச்சிகிச்சை முறைகள் மேலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Minister of Health , Corona, vulnerability, 61 thousand people, Minister of Natural Medicine, Health, Information
× RELATED சொத்து குவிப்பு வழக்கு:...