×

போயஸ் கார்டனில் தீபக் போலீசாருடன் மோதல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தாங்கள் தான் வாரிசு என்று அறிவிக்க கோரி தீபக் மற்றும்  தீபா ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்துக்கு தீபக் மற்றும் தீபா வாரிசுதாரார்கள் என்றும், ஜெயலலிதாவின் சொத்துகளை பராமரிக்க தனி அறக்கட்டளை உருவாக்கி அதில் இருவர் தலைமையில் கவனிக்க வேண்டும் என்று அறிவித்தது. அதைதொடர்ந்து ஜெயலலிதாவின் பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு இருவரும் அதிகாரப்பூர்வமான வாரிசு என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தீபக் நீதிமன்றம் வழங்கி தீர்ப்பின் நகலை எடுத்துக்கொண்டு நேற்று மாலை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் ‘வேதா இல்லத்திற்கு’ வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் வேதா இல்லத்திற்குள் செல்ல அனுமதிக்கான ஆவணங்களை தீபக் காட்டி, நான் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது, இந்த இல்லம் தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும். எங்களுக்கு உங்களை உள்ளே அனுமதிக்க அதிகாரம் இல்லை என்று போலீசார் கூறியதாக தெரிகிறது.

இதனால் தீபக்கிற்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதாவின் இல்லத்தின் அருகே தனியார் தொலைக்காட்சி நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. அதில் இருந்த நபர்கள் தீபக்கை உள்ளே அழைத்தனர். அதன்படி தீபக் போயஸ் கார்டனில் உள்ள மெயின் கேட்டிற்கு அடுத்த கேட் வழியாக உள்ளே சென்றார். அதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். பின்னர் தீபக் 10 நிமிடங்கள் உள்ளே இருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஜெயலலிதாவின் வீட்டிற்குள் திடீரென ஆய்வு நடத்த சென்ற தீபக்கால் சிறிது நேரம் போயஸ் கார்டனில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Boise Garden ,Deepak , Boise Garden, Deepak, Police, Conflict
× RELATED நடப்பாண்டு வெயில் அதிகமாக இருக்கும்...