×

கொரோனாவுக்கு துறைமுக ஊழியர் பலி முறையான சிகிச்சை அளிக்காததே காரணம் என மக்கள் குற்றச்சாட்டு: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

திருவொற்றியூர்: எர்ணாவூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர் (51). எண்ணூர் துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் இவருக்கு எண்ணூர் துறைமுகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இவருக்கு நோய் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. இதையடுத்து நேற்று முன்தினம் சேகர் வீட்டுக்கு சென்ற திருவெற்றியூர் சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரை புளியந்தோப்பில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கும்படி, உறவினர்களிடம் தெரிவித்தனர். அதற்கு உறவினர்கள், ‘‘சேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்,’’ என்றனர்.

ஆனால் அதை ஏற்காத அதிகாரிகள், நாங்கள் சொல்வதை மட்டும் செய்யுங்கள். என கூறிவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து, உறவினர்கள் சேகரை புளியந்தோப்பில் உள்ள தனிமை வார்டில் சேர்த்துள்ளனர். அங்கு, நேற்று காலை சேகருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுபற்றி சேகரின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று காலை எர்ணாவூரில் உள்ள சேகரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், ‘‘சேகரை மருத்துவமனையில் அனுமதித்து முறையாக சிகிச்சை அளிக்காததே, அவர் இறப்புக்கு காரணம்’’ என அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்த எண்ணூர் போலீசார்பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.

Tags : Corona ,port worker victims , Corona, port employee killed, treatment, cause, public accusation, officer, argument
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 955,694 பேர் பலி