×

தமிழகம் முழுவதும் மக்கள் ஏமாந்து திரும்பினர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் திடீர் நிறுத்தம்: சேலத்துக்கு மட்டும் விதிவிலக்கு

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்குவது நேற்று திடீரென நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 120 நகர கூட்டுறவு வங்கிகள், 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 115 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என பல அடுக்குகளாக கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன.

இவற்றில், தங்க நகைகளின் மீது பொது நகைக்கடன் மற்றும் விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது. மற்ற வங்கிகளில் தற்போது கிராமுக்கு ரூ.2,800 மட்டுமே கடன் வழங்கப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகளில் கிராமுக்கு ரூ.3,300 வரை 9% வட்டியில் வழங்கப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டி வசூலிக்கப்படுவதாலும், விரைவாக கடன் வழங்குவதாலும் பலரும் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையில், அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்கும் மக்களிடம் கந்துவட்டிக்காரர்கள் அதிக வட்டி வசூலித்து வருகின்றனர்.

எனவே, மக்களின் நலன் கருதி, `கொரோனா சிறப்பு நகைக்கடன்’’ என்ற புதிய திட்டம் கூட்டுறவு வங்கியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நகைக்கடன்களை மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, அனைத்து மாவட்ட இணைப்பதிவாளர்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்க குவிந்தவர்களிடம் நிர்வாகத்தினர், தற்போது நகைக்கடன் வழங்க இயலாது என கூறிவிட்டனர். இதனால், பொது நகைக்கடன் மற்றும் விவசாய நகைக்கடன் பெற வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த நகைக்கடன்களை மறு உத்தரவு வரும்வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இன்று (நேற்று) முதல் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர். இதற்கிடையே சேலம் மண்டல கூட்டுறவு அதிகாரிகள், சென்னையில் உள்ள கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் நேற்று ஆலோசித்தனர். அதன் பின்னர், வங்கிகளில் கூட்டம் சேராமலும், ரூ.20 லட்சத்துக்கு மிகாமலும் நகைக்கடனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அனுமதி சேலம் மாவட்டத்திற்கு மட்டும்தான் என்று கூறப்படுகிறது. 


Tags : Tamil Nadu , Tamil Nadu, People's Emandu, Co-operative Bank, Jewelry Loan, Sudden Stop, Salem Exception
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...