×

கேரள தங்க கடத்தல் வழக்கு: கட்டாய விடுப்பில் இருக்கும் சிவசங்கரை விசாரணைக்கு அழைக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம்!

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் கிடுக்கிபிடியை இறுக்கியுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் முதலமைச்சர் பிரனாயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளி சந்திப் நாயரை 8 நாள் காவலில் எடுத்துள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள், இருவரையும் திருவனந்தபுரத்தில் வைத்து இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

இதில் ஸ்வப்னா சுரேஷுக்கு கேரள அரசில் கீழ் மட்டம் முதல் உயரதிகாரிகள் வரை நெருங்கிய நட்பு இருந்தது தெரியவந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்வப்னாவின் சகோதரர் திருமண நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் பங்கேற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேபோல் சந்திப் நாயர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் தொடர்பான பல்வேறு போலி ஆவணங்களும், கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் உள்ள விவரங்கள் தொடர்பாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிடுக்கிபிடி கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். கடத்தலுக்கு கையாண்ட வழிமுறைகளையும், யார், யாரிடம் இருந்து தங்கத்தை விற்பனை செய்தார்கள் என்ற விவரங்களையும் துருவி, துருவி அதிகாரிகள் விசாரிக்கிறார்கள். மேலும் விசாரணையின் போது முதலமைச்சர் பிரனாயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கருக்கும், கடத்தல் கும்பலை வழிநடத்திய ஸ்வப்னாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டாய விடுப்பில் இருக்கும் சிவசங்கரை விசாரணைக்கு அழைக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சிவசங்கரிடம் விசாரணை நடத்தினால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலமைச்சர் பிரனாயி விஜயனுக்கு நெருக்கடி மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Sivasankara ,Kerala ,NIA ,Sivasankar , Gold smuggling case: More trouble brewing for Sivasankar
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...