×

விளாத்திகுளம் கொரோனா வார்டில் நொண்டி விளையாடி மகிழ்ந்த நோயாளிகள்: மன இறுக்கமெல்லாம் போயாச்சு சார்

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மன இறுக்கம் மறந்து நொண்டி விளையாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 64 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் நேற்று முன்தினம் முழு  ஊரடங்கு என்பதாலும், கொரோனா வார்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதாலும்  மருத்துவமனை வளாகத்தில் நொண்டி அடித்து விளையாடியுள்ளனர். கொரோனாவால் மருத்துவமனை தனிமை வார்டில் இருந்த மன இறுக்கம் மறந்து மகிழ்ச்சியாக விளையாடியதை சிலர் செல்போனில் படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் பல்வேறு குழுக்களுக்கு பகிர்ந்தனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே  விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று  வந்த விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த 22 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் 7 நாட்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags : corona ward ,Vilathikulam ,sir , Vilathikulam, Corona Ward
× RELATED ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகள் 4 பேர் தப்பி ஓட்டம்