×

‘பிரியாத வரம் வேண்டும்...’பசுவின் பிரிவை தாங்க முடியாமல் ‘பாசப்போராட்டம்’ நடத்திய காளை: அலங்காநல்லூர் அருகே மக்கள் வியப்பு

வாடிப்பட்டி:  அலங்காநல்லூர் அருகே விற்பனைக்காக வாகனத்தில் ஏற்றிய பசுவினை பிரிய முடியாத காளை, வாகனத்தை சுற்றி சுற்றி வந்து பாசப்ேபாராட்டம் நடத்தியது அப்பகுதி மக்களை வியப்படைய செய்தது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாலமேட்டை சேர்ந்தவர் முனியாண்டி. விவசாயியான இவர் பசு மாடு வளர்த்து வந்துள்ளார். பசுவுடன் பாலமேடு மஞ்சமலை கோயில் காளையும் ஒன்றாக வளர்ந்து வந்தது, மேலும் பசுவுக்கு வைக்கும் காய்கறி- பழங்கள், அரிசி, தண்ணீரையும் காளை சாப்பிட்டு வந்துள்ளது. ஊரடங்கால் வருமானமின்றி தவித்த முனியாண்டி பசு மாட்டினை விற்பனை செய்ய முடிவெடுத்தார். அதன்படி சரக்கு வாகனத்தில் பசு மாட்டினை ஏற்றி விற்பனைக்காக வெளியூர் கொண்டு செல்ல முயற்சித்தார்.

இதை கண்ட காளை, பசுவினை பிரிய மனமில்லாமல் வாகனத்தையே சுற்றி சுற்றி வந்தது. சுமார் 1 மணிநேரம் வாகனத்தை எடுக்க விடாமல் வழிமறித்தும், டிரைவரையும் முட்டுவது போல் அச்சுறுத்தியது. ஒருவழியாக டிரைவர் காளையை ஏமாற்றி வாகனத்தை எடுத்து புறப்பட்டார். இதையடுத்து காளை வாகனத்தை பின்தொடர்ந்து சாலையில் 1 கிமீ தூரம் ஓடி சென்று மூச்சு வாங்கி நின்றது. பசுவின் மீது கொண்ட அன்பால், அதன் பிரிவை தாங்க முடியாமல் காளை மாடு நடத்திய பாசப்போராட்டம் அப்பகுதி மக்களை வியப்படைய செய்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : division ,Alankanallur ,love struggle ,Pasapporattam , Cow, affection, bull, Alankanallur, people
× RELATED அலங்காநல்லூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை