×

திருவள்ளூர் நகரில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர்: திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து திருத்தணி, திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அதிக வேகத்தில் சென்று வருகின்றன. இச்சாலையில், திருவள்ளூர் நகரில் வசிக்கும் சிலர் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர். சுற்றித் திரியும் மாடுகளால், தற்போது பெரும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனங்கள் சென்று வரும் நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென சாலையில் குறுக்கே மாடுகள் வந்துவிடுகின்றன.

இதனால் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல நேரங்களில் விபத்தினை சந்திக்க நேரிடுகிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. விரைவான போக்குவரத்து ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் தற்போது வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் பட்டறைபெரும்புதூர், பாண்டூர் ஆகிய பகுதிகளிலும் மாடுகள் சுதந்திரமாக திரிகின்றன. திருவள்ளூர் - பேரம்பாக்கம் சாலையில், திருப்பாச்சூர், அகரம் ஆகிய பகுதிகளிலும், பேரம்பாக்கம் - பூந்தமல்லி சாலையில் மப்பேடு பகுதியிலும் கால்நடைகள் திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையிலேயே படுத்து உறங்குகிறது. இதனால், தினமும் ஏராளமான விபத்துகள் நடந்து வருகிறது.


Tags : roads ,accident ,Motorists ,Tiruvallur , Tiruvallur Nagar, Road, Cattle, Accident Risk, Motorists, Avadi
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...