×

வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குவிக்கப்படும் தங்கம் கடத்தலின் சொர்க்கமாக மாறிய கேரளா: என்ன நடக்கிறது? பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: “கடவுளின் தேசம்” என்ற பெயர் கேரளாவுக்கு உண்டு என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்போது தங்கம் கடத்தலின் சொந்த தேசம் என்ற பெயர் கேரளாவுக்கு கிடைத்துள்ளது. உலகின் மூலை முடுக்கெல்லாம் எங்கு சென்றாலும் அங்கு கேரளாவை சேர்ந்த ஒருவர் இருப்பார் என்று முன்பு கிண்டலாக ஒரு பழமொழி கூறுவதுண்டு... சந்திரனில் முதன்முதலாக நீல் ஆம்ஸ்ட்ராங் காலை வைத்தார். அப்போது ‘நான்தான் சந்திரனில் முதலில் கால் வைத்த நபர்’ என்று அவர் பெருமையாக கருதிக் கொண்டிருந்தாராம். இந்த சமயத்தில் திடீரென ‘சார் உங்களுக்கு ‘சாயா’ (டீ) வேண்டுமா என்று ஒருவர் கேட்டாராம். இதைக் கேட்ட நீல் ஆம்ஸ்ட்ராங் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்....இப்படி நகைச்சுவையாக ஒரு கதை கூறுவதுண்டு. அதாவது, நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு போவதற்கு முன்பே கேரளாவை சேர்ந்த ஒருவர் அங்கு சென்று டீக்கடை போட்டு விட்டாராம்... உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு கேரளாவை சேர்ந்த ஒருவர் இருப்பார் என்பதை உணர்த்துவதற்காகவே இப்படி  கிண்டலாக கூறுவார்கள்.

இதன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே அதிக வெளிநாட்டு பணம் கேரளாவில் குவிந்து கொண்டிருக்கிறது. துபாய், குவைத், சவுதி அரேபியா உட்பட வளைகுடா நாடுகளில் கேரள மக்கள்தான் அதிகளவில் உள்ளனர்.  சின்னஞ்சிறு மாநிலமான கேரளாவில், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் என நான்கு இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா?. இந்த நான்கு விமான நிலையங்கள் வழியாக வருடத்திற்கு டன் கணக்கில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சமீபத்தில் வெளியான ஒரு தகவலின்படி வருடத்திற்கு 200 டன் தங்கம் பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கு மேல் கேரளாவுக்கு தான் வருகிறது. தங்கம் கடத்துவதற்காக சர்வதேச அளவில் பல கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் கேரளாவுக்கு தங்கம் கடத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். இந்த கும்பலில் உள்ள யாரும் நேரடியாக தங்கத்தை கடத்துவது கிடையாது. இதற்காக கேரியர் ஏஜென்ட்டுகளை வைத்துள்ளனர். இந்த ஏஜென்ட்டுகளை தேர்வு செய்வதற்காக என்றே பல்வேறு நாடுகளில் ஏஜென்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவர்கள் கேரளா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ளவர்களை அணுகி தங்கம் கடத்த தயார் செய்வார்கள். மாணவர்கள், குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் ஆகியோரை பண ஆசை காட்டி தங்களது வலையில் வீழ்த்துவார்கள். தங்கம் கடத்துவதற்கு ஒரு ஆளை தேர்வு செய்து கடத்தல் கும்பலுக்கு கொடுத்தால் ஏஜென்சி நிறுவனத்திற்கு ரூ.5000 கிடைக்கும். தங்கம் கடத்துபவர்களுக்கு விமான டிக்கெட் மற்றும் ரூ.50,000 வரை பணமும் கிடைக்கும். பணத்திற்கு ஆசைப்பட்டு பலரும் இவர்களது வலையில் விழுந்து விடுகின்றனர். துபாய் குவைத் உள்பட நாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களை வைத்தும் தங்கம் கடத்துவது உண்டு. குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்களை குறிவைத்து அவர்களை கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.

தங்கத்தை கடத்த சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படும். விமான நிலையத்தில் சிக்காமல் இருப்பதற்காகவும் சிறப்பு பயிற்சி கொடுக்கின்றனர். ஆடைகளுக்குள் மறைத்து வைப்பது, ஆசனவாயில் மறைத்து வைப்பது, மிக்சி, மின்விசிறி உள்பட எெலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்து கடத்துவது, தங்கத்தை பசை வடிவில் கடத்துவது என கடத்தலில் பல டெக்னிக்குகள் உண்டு. கேரளாவில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்கள் வழியாக மாதத்திற்கு 100 கோடிக்கு மேல் தங்கம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில் ஒரு சிலர் பிடிபட்டாலும் அவர்களுக்கு பின்னணியில் உள்ள கும்பல்கள்  சிக்குவது கிடையாது.

இப்படித்தான் கடந்த மாதம் 30ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு துபாயில் இருந்து ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் தங்கம் கடத்துவதாக திருவனந்தபுரம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆனால் முதலில் அதை அதிகாரிகள் நம்பவில்லை. அப்படியே அதில் தங்கம் இருந்தாலும் அதை திறந்து பரிசோதிக்க அவர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனாலும் மிகவும் நம்பத்தகுந்த இடத்திலிருந்து தகவல் வந்ததால் அதிகாரிகளால் அதை திறந்து பார்க்காமலும் இருக்க முடியவில்லை.

இதையடுத்து இந்த விவரத்தை திருவனந்தபுரம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு தெரிவித்தனர். இந்தநிலையில் தான் அந்த பார்சலுடன் அனுப்பப்பட்ட உறுதிமொழி பத்திரத்தில்  அதிகாரிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. இதையடுத்து இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய திருவனந்தபுரத்திலுள்ள  தூதரகத்தை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டனர். உடனடியாக விமான நிலையத்திற்கு சரித்குமார் என்பவர் சென்றார். இவர் தூதரகத்தின் முன்னாள் பிஆர்ஓ ஆவார். இவர் சென்ற சிறிது நேரத்திலேயே தூதரகத்தில் முன்னாள் நிர்வாக செயலாளராக பணிபுரிந்த சொப்னா சுரேஷ், விமான நிலைய சுங்க இலாகா உதவி கமிஷனருக்கு போன் செய்தார். தூதரகத்திற்கு வந்த பார்சலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் கூறினார்.

இதற்கிடையே விமான நிலையத்திற்கு சென்ற சரித்குமார், பார்சலை உடனடியாக விடுவிக்கா விட்டால் நடப்பதே வேறு, என்று  சுங்க இலாகா அதிகாரிகளை மிரட்டினார். இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பார்சலை பிரித்த போது தான் அதில் 30 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பிறகுதான் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தங்க கடத்தலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சொப்னா சுரேஷ், கேரள முதல்வர் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட முக்கிய பிரமுகர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். கேரளாவில் இருந்து துபாய் உள்பட ஐக்கிய அரபு நாடுகளுக்கு அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகள் சென்றால் அவர்களுக்கு அங்கு ராஜ மரியாதை கிடைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் சொப்னா தான் செய்து வந்தார்.

இதற்கு கைமாறாக சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பல உதவிகளை செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராகவும், ஐடி துறை செயலாளராகவும் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கர், சொப்னாவுடன் மிகமிக நெருக்கமாக இருந்துள்ளார். திருவனந்தபுரத்தில் சொப்னா தங்கியிருந்த பிளாட்டுக்கு இவர் அடிக்கடி சென்று வந்ததற்கான ஆதாரங்கள் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன. பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களில் தான் இவர் சொப்னா வீட்டுக்கு சென்று வந்துள்ளார். சிவசங்கருடனான இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சொப்னா பல தில்லுமுல்லுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியாக இதுவரை 11 முறை தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. 11வது முறையாக கடந்த மாதம் தங்கம் கடத்திய போது தான் சொப்னா தலைமையிலான கும்பல் வசமாக சிக்கியது. லாக் டவுன் சமயத்தில் கூட நான்குமுறை தங்கம் கடத்தப்பட்டுள்ளது. இதுவரை 300 கிலோவுக்கும் அதிகமாக தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு கடத்தப்பட்ட தங்கத்தில் பெரும்பாலும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு  சென்றிருக்கலாம் என்று இந்த வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ கருதுகிறது. ஆனால் தீவிரவாதிகளுக்கு மட்டுமில்லாமல் இந்த கடத்தல் தங்கம் கேரளாவைச் சேர்ந்த சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் சென்று  இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தங்க கடத்தலின் பின்னணியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கும்தொடர்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தங்க கடத்தலில் ரமீஸ் என்பவரை கடந்த இரு தினங்களுக்கு முன் சுங்க இலாகாவினர் கைது செய்தனர். இவர் கேரளாவில் கடந்த உம்மன்சாண்டி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒரு முக்கிய கட்சித் தலைவரின் உறவினர் என்றும் கூறப்படுகிறது. இந்த தங்கக் கடத்தல் சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று என்ஐ ஏ அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே இந்த வழக்கு விசாரணையில் விரைவில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

* பினராய் விஜயனுக்கு சிக்கல்
இந்த தங்கக் கடத்தல் வழக்கு, முதல்வர் பினராய் விஜயனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை முதலில் சுங்க இலாகா மட்டும்தான் விசாரிக்கும் என்று கேரள ஆளுங்கட்சி கருதியது. ஆனால், அதிரடியாக  தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை ஏற்றுக்கொண்டது அதற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் தகவல் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆன பின்னரும் முதலில் கேரள அரசு எந்த விசாரணைக்கும் உத்தரவிடவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக, கேரள எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏ வுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விசாரணையில் கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்ற முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* 21 முறை கடத்திய அயர்லாந்து வாலிபர்
கேரளாவுக்கு தங்கம் கடத்துவதற்கு இந்த கும்பல் வெளி நாட்டைச் சேர்ந்தவர்களையும் கூட பயன்படுத்துவார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன் கொச்சி விமான நிலையத்தில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபர் பிடிபட்டார்.  அவரிடமிருந்து 10 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அந்த வாலிபரிடம் விசாரித்த போது இதற்கு முன் 20 முறை கொச்சிக்கு தங்கம் கடத்தி வந்ததாக கூறினார். இதைக் கேட்டு சுங்க இலாகாவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் மட்டுமே 126  கிலோ தங்கத்தை கடத்தி உள்ளார்.

* இசையமைப்பாளர் பாலபாஸ்கர் மரணத்திலும் தொடர்பா?
தங்கம் கடத்தலுக்கு மலையாள சினிமா கலைஞர்களையும் இக்கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது. மலையாள சினிமா நடிகர், நடிகைகள் உள்பட கலைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளை நடத்த செல்வது உண்டு. இவ்வாறு செல்பவர்களில் சிலரை கடத்தல் கும்பல் தங்கம் கடத்த பயன்படுத்தி வந்துள்ளனர். சினிமா கலைஞர்களுக்கு தெரியாமலேயே அவர்களது உதவியாளர்கள் மூலமும் தங்கம் கடத்துவது உண்டு. இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன்  பிரபல வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான பாலபாஸ்கர் குடும்பத்துடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் பால பாஸ்கரும், அவரது 2 வயது மகளும் இறந்தனர்.

இது விபத்து அல்ல, கொலை என்று அப்போதே பல பாஸ்கரின் தந்தை கூறினார். பலமுறை பாலபாஸ்கருக்கு தெரியாமலேயே அவரது மேனேஜர் ஒருவரை பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து கடத்தல் கும்பல் தங்கத்தை கடத்தி உள்ளனர் என்றும், இதுகுறித்து பின்னர் தெரியவந்ததால் தனது மேனேஜரை பால பஸ்கர் டிஸ்மிஸ் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த கோபத்தில்தான் தங்கக் கடத்தல் கும்பல் பாலபாஸ்கரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்திருக்கலாம் என்று அவரது தந்தை கூறினார். இந்த விபத்து நடந்தபோது  தற்போது தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரித்குமார் இருந்ததாக அந்த விபத்தை பார்த்த ஒருவர் போலீசிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

* நடிகையிடம் விசாரணை?
இந்த தங்க கடத்தலில் மலையாள சினிமா துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடத்தல் தங்கத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் மலையாள சினிமா தயாரிப்பிலும் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான ஒருவருக்கு இந்த கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு இருப்பதாக என்ஐஏ வுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த நடிகை தமிழிலும் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவரது நடவடிக்கைகளை என்ஐஏ அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளையும், யார் யாரிடம் இவர்  பேசி வந்தார் என்ற விவரங்களையும் என்ஐஏ அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். விரைவில் இவரிடமும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

* 9 நாள் என்ஐஏ காவல்
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சொப்னாவும், சந்தீப் நாயரும் கேரளா அழைத்து வரப்பட்டு, அன்று மாலையே கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 3 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர். இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் வரும் 21ம் தேதி வரை 9 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். தொடர்ந்து இருவரையும் விசாரணைக்காக அதிகாரிகள் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றனர்.

காதல் விளையாட்டு: சொப்னா சுரேஷ் சிறு வயதில் இருந்தே காதல் விளையாட்டுக்களை தொடங்கி விட்டார். இவர் பிறந்ததும், வளர்ந்ததும் துபாயில்தான். சிறு வயதில் இவரது குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் சொப்னாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இது வீட்டாருக்கு தெரிந்து பிரச்னை ஏற்பட்டுள்ளது. துபாயில் 10ம் வகுப்பு படித்தபோது, இவர் ஒரு பாதிரியாருடன் மும்பைக்கு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து பெற்றோர் மும்பை சென்று சொப்னாவை கண்டுபிடித்து துபாய் அழைத்து சென்றனர். இதன்பிறகு திருவனந்தபுரம் திரும்பிய சொப்னா சுரேஷுக்கு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் மேயரின் உறவினருடன் திருமணம்  நடந்தது.

இதில் ஒரு மகள் பிறந்தார். சில ஆண்டுகளிலேயே அவர்களது உறவு முறிந்தது. அதன்பிறகு மகளுடன் கோவை சென்றார். அங்கு மதுபார் முதலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இது சட்டரீதியான திருமணமா என்பது தெரியவில்லை. அதன்பின்னர் மீண்டும் திருவனந்தபுரம் திரும்பிய அவர் 3வதாக ஒருவரை திருமணம் செய்தார். அவர் மூலம் ஒரு மகன் பிறந்தார். அந்த கணவர்தான் தற்போது சொப்னா சுரேஷூடன்  உள்ளார்.

மார்பிங் படம் வைரல்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் திருமணம் சமீபத்தில் நடந்தது. இதில் சொப்னா சுரேஷ் கலந்து கொண்டதாக அவரது புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆனால், சொப்னா சுரேஷ், திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும், அது மார்பிங் செய்யப்பட்ட படம் எனவும் தெரியவந்துள்ளது. கேரள தொழில்துறை அமைச்சர் ஜெயராஜனின் மனைவி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது தலையை மார்பிங் செய்து சொப்னா சுரேஷின் படமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். இது தொடர்பாக அமைச்சர் ஜெயராஜன் டிஜிபியிடம் புகார் செய்துள்ளார்.

* சொப்னாவை கொல்ல திட்டம்
கடத்தல் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை தொடங்கியதால், சிக்கி விடுவோம் என உணர்ந்த சொப்னா, உயர்நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டு, சந்தீப் நாயர் மற்றும் குடும்பத்துடன் கொச்சி சென்றுள்ளார். ஆனால், சரணடைய வேண்டாம் என்று சந்தீப் நாயர் கூறியதால், முன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்து விட்டு பெங்களூரு சென்றனர். இவர்களது காரை பெங்களூருவரை வேறு ஒரு காரும் பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அது சொப்னா சுரேஷையும் குடும்பத்தையும் கொலை செய்ய வந்த கும்பலாக இருக்கலாம் என்று என்ஐஏவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சொப்னா சரணடைந்தால் தங்களுக்கு சிக்கல் என கருதியே கடத்தல் கும்பல் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என் கூறப்படுகிறது. இது குறித்தும் என்ஐஏ விசாரணை நடத்துகிறது.

Tags : Kerala , Abroad, Illegal, Gold Smuggling, Turned Heaven, Kerala, What's Happening ?, Information
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...