×

கொரோனா பீதிக்கு இடையிலும் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் தபால் வாக்குப்பதிவு துவங்கியது: 7 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பு

கொழும்பு: இலங்கையில் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு, கொரோனா பீதிக்கு இடையிலும் நேற்று தொடங்கியது. இதில், 7 லட்சம் அரசு ஊழியர்கள் வாக்களிக்கின்றனர். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ஏற்றார். இதைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை ராஜினாமா செய்ய வைத்து, தனது சகோதரரான முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை பிரதமராக்கினார்.

அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அதற்கு கடந்த ஏப்ரலில் 25ம் தேதி தேர்தல் நடத்தப்பட இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையிலும் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 25ம் தேதி நடைபெற இருந்த தேர்தல், 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் மத்தியில் ஊரடங்கு விலக்கப்பட்டது. நாடு முழு அளவில் இயங்கியது. பின்னர், ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர், கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியதால், பள்ளிகள் மட்டும் மூடப்பட்டன. அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜபக்சேவின் தேர்தல் பேரணிகள் ரத்து செய்யப்பட்டன. இருந்தாலும், தேர்தல் தேதியை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலின் முதல் கட்டமான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. இதில், ஆகஸ்ட் 5ம் ேததியன்று தேர்தல் பணியாற்ற உள்ள 7 லட்சம் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வாக்களித்து வருகின்றனர். இந்த தபால் வாக்குபதிவு மொத்தம் 5 நாட்கள், 2 கட்டமாக நடைபெறுகிறது. இந்த வாரத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க தவறும் அரசு ஊழியர்கள், 2ம் கட்டமாக அடுத்த வாரம் 2 நாட்கள் நடைபெறும் தபால் வாக்குப்பதிவில் வாக்களிக்கலாம். இத்தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* ஆக.6ல் வாக்கு எண்ணிக்கை
இலங்கையில் வழக்கமாக வாக்குப்பதிவு முடிந்ததுமே வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும். ஆனால், இம்முறை கொரோனா அச்சம் காரணமாக, வாக்கு எண்ணிக்கையை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்காக தேர்தல் முடிந்த மறுநாள், அதாவது ஆகஸ்ட் 6ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.

* இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225.
*  மொத்தம் 1.6 கோடி பேர், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* இலங்கையில் நேற்றைய நிலவரப்படி, கொரோனாவால் மொத்தம் 2,511 பேர் பாதித்துள்ளனர். 11 பேர் இறந்துள்ளனர்.

Tags : servants ,voting ,panic ,election ,Corona ,Sri Lankan , Corona Panic, Sri Lanka, Parliamentary Elections, Postal Voting, 7 Lakhs, Government Employees
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...