×

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசில் சமாதான முயற்சிகள் தோல்வி தனிக்கட்சி தொடங்க பைலட் முடிவு?: கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்களுக்கு விடுதிகளில் பாதுகாப்பு

புதுடெல்லி: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையிலான அதிகார மோதலினால், அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குதிரை பேர விவகாரம் தொடர்பாக, மாநில போலீசாரின் சிறப்பு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி அவமானப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 107 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இத்துடன் சுயேச்சை, உதிரி கட்சிகளின் கூட்டணியுடன் அங்கு ஆட்சி அமைத்தது. அப்போது மாநில தலைவராக இருந்த சச்சின் பைலட் முதல்வராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால் ஆரம்பம் முதலே, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரம், அரசு எடுக்கும் எந்தவொரு முக்கிய முடிவும் தங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்படுவதாக பைலட் தரப்பு அரசு மீது குற்றம் சாட்டி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது போல, ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ குதிரை பேரம் நடத்துவதாக முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுக்கு தலா ரூ.25 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் கூறினார். இதையடுத்து, முதல்வர் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், அரசு தலைமை கொறடா மற்றும் சில எம்எல்ஏக்களுக்கு இது தொடர்பாக தங்களது வாக்குமூலத்தை அளிக்கும்படி மாநில போலீசாரின் சிறப்பு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து, நோட்டீஸ் அனுப்பி தன்னை அவமானப்படுத்தியதாக பைலட், அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தனக்கு 30 எம்எல்ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், தற்போது கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என தனது செய்தி தொடர்பாளர் மூலம் நேற்று முன்தினம் இரவு பைலட் அறிக்கை வெளியிட்டார். இதனால், சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை இறங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன், கட்சியின் தலைமை தகவல் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோரை மேலிடப் பார்வையாளராக அனுப்பியது. மேலும், கெலாட்டுக்கும் பைலட்டுக்கும் இடையிலான பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளித்தது. இருப்பினும், பைலட் தனது பிடியை தளர்த்தவில்லை.

இதையடுத்து, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், சோனியாவின் ஆலோசகரும் மூத்த தலைவருமான அகமது படேல், காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பைலட்டை தொடர்பு கொண்டு சமாதானப்படுத்த முயன்றனர். இதற்கிடையே, ஜெய்ப்பூரில் உள்ள முதல்வரின் அரசு இல்லத்தில் நேற்று மதியம் 1.30 மணிக்கு நடந்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் பைலட் கலந்து கொள்ளவில்லை. அதே நேரம், அவரது ஆதரவாளர்களான சிங் ராவந்த், பிரசாந்த் பைர்வா, டேனிஷ் அப்ரார், ரோகித் போக்ரா உள்பட 100க்கு மேற்பட்ட எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர்.

அவர்கள் கெலாட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். கூட்டம் முடிந்த பின்னர், அவர்கள் அனைவரும் அங்கிருந்து சொகுசு விடுதிகளுக்கு பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர். முதல்வர் அசோக் கெலாட்டும் எம்எல்ஏ.க்களுடன் புறப்பட்டு சென்றார். இதே போல், கடந்த மாதம் ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தல் நடந்த போது, பாஜ.வின் குதிரை பேரத்தை தடுப்பதற்காக எம்எல்ஏ.க்கள் பேருந்துகளில் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில், ``109 எம்எல்ஏ.க்கள் முதல்வர் கெலாட் தலைமையில் நம்பிக்கை இருப்பதாக கூறி, ஆதரவு கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும், சில எம்எல்ஏக்களுடன் முதல்வர் பேசி வருகிறார். பின்னர், அவர்களிடம் இருந்தும் ஆதரவு கடிதம் பெறப்படும்,’’ என்று கூறினார்.

* ராகுல், பிரியங்கா முயற்சி
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரின் சமாதானத்தை சச்சின் பைலட் ஏற்காததால், இப்பிரச்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அவருடைய சகோதரி பிரியங்கா காந்தியும் நேரடியாக இறங்கியுள்ளனர். அவர்களும் பைலட்டை சமாதானப்படுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

* பைலட் அரசுக்கு பாஜ ஆதரவு?
ராஜஸ்தான் மாநில பாஜ தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில், ``இளையத் தலைவர்கள் காங்கிரசில் எப்போதும் புறக்கணிக்கப்பட்டு, ஒரங்கட்டப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக கட்சியை வலுப்படுத்திய பைலட் புறக்கணிப்பட்டு உள்ளார்.  காங்கிரஸ் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறது. பைலட் ஆட்சி அமைத்தால், அதற்கு பாஜ வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. ஆனாலும், இது குறித்து கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ,  அதன்படி செயல்படுவோம்,’’ என்றார்.

* கதவுகள் திறந்தே இருக்கும்
முதல்வர் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை தகவல் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, ``சச்சின் பைலட், மற்ற எம்எல்ஏ.க்களுக்காக கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கும்’’ என்று கூறினார்.

* ஆளுநரிடம் நிரூபிக்க முடியுமா?
கெலாட் கூட்டிய கூட்டத்தில் 106 எம்எல்ஏ.க்கள் பங்கேற்று, அவருடைய அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை நிராகரித்துள்ள பைலட் ஆதரவாளர்கள், ‘அப்படி என்றால், ஆளுநரை சந்தித்து கெலாட்டால் அதை நிருபிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளனர்.

* வருமான வரித்துறை சோதனை
அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வரின் நெருங்கிய உறவினர்களும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுமான தர்மேந்திர சிங் ரத்தோர், ராஜிவ் அரோராவுக்கு சொந்தமான
நிறுவனங்களில் 80க்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை, கோடாவில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் ராஜஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நீர் மின் உற்பத்தி கட்டமைப்பு நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


Tags : hotels ,party ,Pilot ,pro-Kelad MLAs ,Rajasthan ,Congress , Rajasthan, Ruling Congress, Peace Efforts Fail, Private Party, Pilot Decision ?, Golad Support, MLA., Accommodation, Security
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...