தமிழகத்தில் ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா சென்னையை விட மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1,140 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 3,188 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையை விட மற்ற மாவட்டங்களில் 3 மடங்கு தொற்று அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று 43,548 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4,328 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் தமிழகத்தில் வசிப்பவர்கள் 4,270 பேர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 56 பேர். இதில் 2,576 பேர் ஆண்கள். 1,752 பேர் பெண்கள். ஒட்டுமொத்தமாக 87,111 ஆண்கள், 55,664 பேர் பெண்கள், 23 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 3,035 பேர் குணமடைந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798.  ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,567. தற்போது 48,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இந்நிலையில் நேற்று மட்டும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனையில் 50 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 24 பேர். இதைத்தவிர்த்து செங்கல்பட்டைச் சேர்ந்த 7 பேர், திருச்சியைச் சேர்ந்த 5 பேர், மதுரை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தலா 4 பேர், சிவகங்கையைச் சேர்ந்த 3 பேர், சேலம் மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த தலா 2 பேர், கரூர், தென்காசி, தேனி, திருவண்ணாமலை, திருப்பூர், விருதுநகரைச் சேர்ந்த தலா ஒருவர் என்று மொத்தம் 66 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 7 பேர் எந்தவித இணை நோய்கள் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டு மட்டும் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2032 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இறப்பு எண்ணிக்கை 2000ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் சென்னையில் 1,277 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக செங்கல்பட்டில் 165 பேரும், திருவள்ளூரில் 129 பேரும், மதுரையில் 120 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>