×

பணம் இன்றி பெற்றோர் கதறல் சிறுமி இதய அறுவை சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வழங்கிய போலீசார்

ஆலந்தூர்: நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் செந்தில்குமார். இவர், கூடுவாஞ்சேரியில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கார்த்திக். இருவரும் நண்பர்கள். சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் கார்த்திக் விற்பனையாளராக உள்ளார். கார்த்திக்கின் 5 வயது மகள் கனிஷ்கா சில மாதங்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த சிறுமிக்கு கடந்த வாரம் உடல்நிலை மோசமானதால், மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர். ஆனால், பணமின்றி தவித்த கார்த்திக் இதுபற்றி நண்பரான தலைமை காவலர் செந்தில்குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் ‘‘இந்த கொரோனா நேரத்தில் ரூ.5 லட்சத்தை எப்படி ஏற்பாடு செய்வேன்,’’ என கதறி அழுதுள்ளார். இதுபற்றி மணப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் அனைத்து காவலர்கள் மூலம் ரூ.45 ஆயிரம், செந்தில்குமார் தனது சொந்த பணம் ரூ.30 ஆயிரம் என ரூ.75 ஆயிரத்தை தயார் செய்து, மருத்துவமனையில் செலுத்தினர். இதையடுத்து, சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தனக்கு தெரிந்த பலரிடம் மீதமுள்ள ரூ.4.25 லட்சத்தை தயார் செய்து, மருத்துவமனையில் செலுத்தினார். அறுவை சிகிச்சையில் கனிஷ்கா குணமடைந்து வீடு திரும்பினார். மகளின் அறுவை சிகிச்சைக்கு உதவிய போலீசாருக்கு கார்த்திக் நன்றி தெரிவித்தார். போலீசாரில் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


Tags : Without money, the parents roared, the girl, the heart surgery, Rs 5 lakh, provided by the police
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.