×

தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை பொது போக்குவரத்துக்கு ''NO ENTRY'': அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படாது....தமிழக அரசு அறிவிப்பு..!!

சென்னை: தமிழகத்தில் வருகின்ற ஜூலை 31-ம் தேதி வரை பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 31-ம் தேதி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து 5 கட்ட ஊரடங்கு முடிவடைந்து தற்போது பல தளர்வுகளுடன் 6-ம் கட்ட ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து அமல்படுத்தப்பட்டு செயலில் உள்ளது. மேலும் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தளர்வும் அல்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், மின்சார ரயில் இயக்கத்திற்கான தடை நீடிக்கும். திரையரங்குகள், ஜிம், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், மக்கள் கூடும் இடங்களை திறப்பதற்கான தடை, மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து  தடை உள்ளிட்டவை நீடிக்கும்.

மேலும் 6-ம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பின்படி, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள், நகர்ப்புற வழிபாட்டுத் தலங்களிலும், பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களின் வழிபாட்டுக்கான தடை நீடிக்கிறது.  நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு  போன்ற சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை நீடிக்கிறது.  இருப்பினும் ஆன்லைன் கல்வி முறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை ஜூலை 1 முதல் ஜூலை 15ம் தேதி வரை நிறுத்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தொடர்ந்து கட்டுப்படுத்தும் இலக்குடன்  வருகின்ற ஜூலை 31-ம் தேதி முடிய தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : announcement ,Government ,Tamil Nadu , Public Transport, Government, Private Buses, Government of Tamil Nadu Notice
× RELATED நகர பேருந்துகளிலும் வசூல் அதிகரிப்பு...