×

தங்க கடத்தல் வழக்கில் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆஜர்

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் வழக்கில் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். என்.ஐ.ஏ நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாகக் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எடுத்துச் செல்ல முயன்ற பார்சலை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடியாகும்.

இந்தப் பார்சலை வாங்குவதற்காக வந்திருந்த சரித் குமார் என்பவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் சுங்கத்துறையினர் விசாரித்தபோது, தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவரும், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவருமான ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்தத் தகவலையடுத்து, ஸ்வப்னாவை போலீஸார் கைது செய்யத் தேடினர். ஆனால், ஸ்வப்னா தலைமறைவாக இருந்து வந்தார். திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் சார்பில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், என்ஐஏ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. ஸ்வப்னா சுரேஷை என்ஐஏ அதிகாரிகள் பெங்களூருவில் கைது செய்தனர். பெங்களூருவில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தபோது ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கொச்சி அழைத்து வரப்பட்டார். சுரேஷ் நாயர் உட்பட மற்ற 3 பேரையும் என்ஐஏ கைது செய்தது. இதையடுத்து இவர்கள் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர்.



Tags : Swapna Suresh ,Sandeep Nair Azhar ,Kochi Special Court , Gold smuggling, Swapna Suresh
× RELATED கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில்...